கொல்கத்தா:
தெற்கு வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் பின்னர் வலுவிழந்து புயலாக மாறி, திங்கள் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் திகா கடற்கரைக்கும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையைக் கடந்தது.புயல் கரையை கடந்த போது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும்கொட்டியது.
இதனால் மேற்கு வங்காளத் திலும், ஒடிசாவிலும் கட லோர மாவட்டங்களில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருமாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.எனினும், ஆம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகி உள்ளனர் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில், கொல்கத்தா நகரில் மட்டும் 17 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும், மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில் மற்றும் மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார். பயிர்கள் கடுமையாக நாசமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளள மம்தா பானர்ஜி, இதுபோன்ற ஒரு பேரழிவை நான் இதற்கு முன் பார்த்ததில்லை எனக் கூறியுள்ளளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென மம்தா கூறியுள்ளார்.வடக்கு 24 பர்கானா மாவட்டம் ஹஸ்னாபாத்-ஹிங்கல்குஞ்ச் பகுதி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சாமதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள 50 முதல் 60 கிராமங்கள் வரை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
ஆம்பன் சூறாவளியை தேசிய பேரிடராக என்று அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்கம் ஒடிசா மாநில மக்களுக்கு மக்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது. மிகப்பெரிய சேதாரத்தை மேற்குவங்கத்திலும் ஒடிசாவிலும் இந்தப் புயல் ஏற்படுத்திச் சென்றுள்ள நிலையில், உடனடியாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்; நாடு முழுவதும் மக்கள் ஏற்கெனவே கொரோனா கொள்ளை நோயை எதிர்கொண்டு பிழைத்திருக்க வேண்டிய கடுமையானப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் இந்த அவசரநிலையை புரிந்துகொண்டு சற்றும் தாமதிக்காமல் களத்தில் இறங்கி செயல்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.