திருவனந்தபுரம்:
கேரளத்தில் தீவிரமான மனித உரிமை பிரச்சனைகள் இல்லை எனவும், ஆதிவாசிகளின் நிலப்பிரச்சனை தொடர்பான சில தனிப்பட்ட புகார்கள் மட்டுமே உள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையர் எச்.எல்.தத்து கூறினார். பொதுவாக கேரளத்தின் மனித உரிமை பாதுகாப்பு திருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த இருதினங்களாக திருவனந்தபுரத்தில் நடந்த ஆணையத்தின் முகாம் அமர்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துஇந்த அமர்வில் பரிசீலிக்கப்பட்டன. பாலக்காடு மாவோயிஸ்ட்கள் கொலை தொடர்பான மாநில அரசின் அறிக்கை வந்துள்ளதா என்பது தெரியவில்லை. சம்பவ நேரத்தில் ஆணையம் திருவனந்தபுரம் அமர்வில் இருந்தது. திரும்பி சென்ற பிறகு அறிக்கை வந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். தேவை என்றால் அரசிடம் விளக்கம் கோரப்படும்.
வாளையாறு சிறுமிகள் மரணம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதுஎன அதிகாரப்பூர்வமற்ற முறையில் தலைமைச் செயலாளர் தெரிவித்ததாக ஆணைய உறுப்பினர் ஜோதிகா கல்ரா கூறினார். கேரளத்தில் 9ஆயிரம் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆர்த்தோடக்ஸ் - யாக்கோபாயா கோயில் தொடர்பான தகராறைத் தொடர்ந்து யாக்கோபாயா நம்பிக்கையாளர்களால் இறந்தோர்உடல்களை நல்லடக்கம் செய்ய முடியவில்லை என்கிற புகார் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆணைய உறுப்பினர் பி.சி.பந்தும் செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்தார்.