tamilnadu

img

கோவிட்டை தடுப்பதும் பட்டினியை போக்குவதும் தற்போதைய முன்னுரிமை: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்:
நாட்டில் கோவிட் பரவலை தடுப்பதும் மக்களின் பட்டினியை போக்கு வதுமே தற்போதுள்ள முன்னுரிமை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். புதனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் எழுந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது: நாட்டில் கோவிட் பரவலை தடுப்பதும் மக்களின் பட்டினி யை போக்குவதுமே தற்போதுள்ள முன்னுரிமை. அதன் பகுதியாகவே நாடுதிரும்பிய புலம் பெயர்ந்தோருக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமர்கோயில் கட்டுமானப்பணி துவக்கம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியபொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிரதிபலிப்பில் அதிசயிக்க ஒன்றுமில்லை. அயோத்தி பிரச்சனையில் காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாடு அனைவருக்கும் தெரிந்ததுதான். ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் போன்றவர்களின் நிலைப்பாடு வரலாற்றின் பகுதியாக உள்ளது. மதச்சார்பின்மையில் காங்கிரசுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்திருந்தால் நாட்டுக்கு இந்த கதி ஏற்பட்டி ருக்காது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் நிலைப்பாட்டில் புதிதாக ஒன்றும் உள்ளதாக கருதவில்லை எனவும் முதல்வர் கூறினார். 

அயோத்தி தொடர்பான சிபிஎம் நிலைப்பாட்டை கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெளிவுபடுத்தி உள்ளது. எக்காலமும் மென்மையான இந்துத்துவத்தையே காங்கிரஸ் பின்பற்றி வந்துள்ளது. பாபர் மசூதி வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது காங்கிரஸ் கட்சிதான். அங்கு கோவிலுக்கான அடித்தளமிட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான். கரசேவை நடத்த அனுமதி அளித்ததும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான். பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை அலட்சியத்துடன் அணுகி யதும் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். இவற்றின் இயல்பான விளைவு பின்னர் ஏற்பட்டது. இவை அனைத்தும் நடந்தபோது கூட்டாக நின்றதுதான் முஸ்லீம்லீக் எனவும் முதல்வர் கூறினார்.