tamilnadu

img

அனைத்து ஏழைகளுக்கும் குடும்ப அட்டை... கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்:
குடும்ப அட்டை இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் இந்த ஆண்டு குடும்ப அட்டை வழங்கப்படும்; பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் சூழல் உருவாக்கப்படும். கேரளத்தின் புனரமைப்பு பணிகளில் பசுமை பராமரிக்கப்படும் என தெரிவித்த கேரள முதல்வர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் கூறினார்.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பலருக்கும் குடும்ப அட்டை இல்லாதது பெரிய நெருக்கடியாகும். இந்த நெருக்கடிக்கு தீர்வு காணப்படும். அனைத்து ஏழைகளுக்கும் இந்த ஆண்டிலேயே குடும்ப அட்டை வழங்கப்படும். கேரள புனரமைப்பு கட்டுமானங்களின் பகுதியாக பசுமை பராமரிக்கப்படும். கேரளத்தின் வனப்பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் 37 கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும். மின் நெருக்கடிக்கு தீர்வுகாண அனைத்து தெருவிளக்குகளும் எல்இடிக்கு மாற்றப்படும்.பொது இடங்கள் பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் கொண்டதாக பராமரிக்கப்படும். பெண்களுக்கான ஓய்விடங்களும் பெண்களுக்கான சுகாதார மையங்களும் அமைக்கப்படும். தொலைதூர பயணம் செய்வோருக்கு சாலையோர ஓய்வு மையங்கள் அமைக்கப்படும். பயணத்தின் நடுவே சற்று ஓய்வெடுக்கவும், பெட்ரோல் பிடிக்கவும், உணவு உண்ணவும், கழிப்பறை வசதியும் கொண்ட ஓய்வு மையங்களாக அவை இருக்கும். அதற்கான இடங்கள் உடனடியாக கண்டறியப்படும். கிராம சாலைகள் புதுப்பிக்கப்படும்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். படிப்புடன் பகுதிநேர வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். வெளிநாடுகளில் உள்ளதுபோல் அத்தகைய ஒரு கலாச்சாரம் வளர்க்கப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ளாட்சி அரசுகளின் சேவைகளும் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்காக இளைஞர் தலைமைத்துவ அகாடமி நிறுவப்படும். இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் உயிர் காக்கும் பணிகளை மேற்கொள்ள சமூக தொண்டர்கள் உருவாக்கப்படுவார்கள். நூறு பேரில் ஒருவர் தன்னார்வ தொண்டராகும் வகையில் இந்த படை உருவாக்கப்படும். அடுத்த மழைக்காலத்துக்கு முன்பு இந்த படைக்கான பயிற்சி நிறைவடையும். தீயணைப்பு மீட்பு படை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், என்சிசி, என்எஸ்எஸ் போன்ற அமைப்புகளைக் கொண்ட இயக்குநர் குழு இதற்காக அமைக்கப்படும்.முன்னேறிய சமூகப் பிரிவுகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கான அளவுகோல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்படும் எனவும் முதல்வர் கூறினார்.