திருவனந்தபுரம்:
தில்லியில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார்நடத்திய வன்முறை வெறியாட்டம் படுகொலையின் நேரடிக் காட்சிகளையும், காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததையும் ஏசியாநெட், மீடியா ஒண்ஆகிய மலையாள காட்சி ஊடகங்கள் வெளியிட்டன. இதற்காக மத்திய அரசு அந்த ஊடகங்களுக்கு 48 மணிநேர தடை விதித்து வெள்ளியன்று இரவு உத்தரவு பிறப்பித்தது.இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
தில்லி வன்முறை குறித்து செய்தி வெளியிட்டதற்காக இரண்டு மலையாள டிவிசானல்களுக்கு மத்திய தகவல் மற்றும்ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது ஆபத்தானது. முகம் மோசமானதால் கண்ணாடியை உடைப்பது போன்றது மத்திய அரசின் நிலைப்பாடு. இது வரவிருக்கும் பெரும் ஆபத்து குறித்து முன்னறிவிப்பு செய்யும் நடவடிக்கையாகும். அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை இந்தியாவில் அமலில் உள்ளது, மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்கிற மிரட்டலாகும் இது.சுதந்திரமான ஊடக செயல்பாடுகளுக்கு எதிரான எல்லை மீறிய தாக்குதலை மத்திய அரசு நடத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் - சங்பரிவார் அமைப்புகளை விமர்சித்தால், பாடம் கற்பிப்போம்என்கிற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது நாளை அனைத்து காட்சி – கேட்டல் – அச்சு ஊடகங்களையும் தண்டிக்கும் வகையில் படரும் என்பதை உணரவேண்டும். ஜனநாயக முறையில் இதுகுறித்த எச்சரிகை தேவை.ஆர்எஸ்எஸ்சையும் தில்லி காவல்துறையையும் விமர்சித்தது என்பதே தடைக்கான ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆர்எஸ்எஸ்சை விமர்சிப்பது எப்படி சட்ட விரோதமாகும்? குடிமகனுக்கு சொந்த கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமையை இந்திய அரசமைப்பு சாசனம் உறுதி செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் புனிதமான அமைப்பு என எந்த சட்ட புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது?
நாட்டில் என்ன நடக்கிறது என்பதைஅறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்குஉண்டு. அவற்றைத் தெரிவிக்கும் உரிமையும் கடமையும் ஊடகங்களுக்கும் உண்டு. இவை இரண்டும் தடை செய்யப்படுவது எந்த முறையில் ஆனாலும் ஜனநாயக மறுப்பாகும். எனவே, இத்தகையதவறான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதும், ஊடகங்களை சுதந்திரமாகவும், நீதி அடிப்படையிலும் செயல்பட அனுமதிப்பது அவசியமாகும் என கேரள முதல்வர் தெரிவித்தார்.
அரை நாளில் தடை நீக்கம்
தடை விதிப்புக்கு எதிராக அரசியல் சமூக தளத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏசியாநெட், மீடியாஒண் தொலைக்காட்சி செய்தி சானல்களுக்கு மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளியன்று இரவு 7.30 மணி முதல் 48 மணி நேரத்திற்கு விதிக்கப்பட்ட தடை ஒரே இரவில் விலக்கிக் கொள்ளப்பட்டது.வன்முறை நடந்த பகுதிகளில் உயிரை பணயம் வைத்து செய்தியாளர்கள் அளித்த செய்திகளையே ஒளிபரப்பியதாக ஏசியாநெட் விளக்கமளித்துள்ளது. செய்திகளை உண்மைத்தன்மையுடன் வழங்கும் உரிமைக்கு அரசமைப்பு சாசன பாதுகாப்பு உள்ளது என மீடியா ஒண் விளக்கமளித்துள்ளது. இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்தபோது நிகழ்விடத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் அளித்துள்ளதாகவும் மீடியா ஒண் தெரிவித்துள்ளது.