tamilnadu

img

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு

கர்நாடக மாநிலத்தின் முன்னால் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் ஹெ.டி.குமாரசாமி மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தபின், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர்களின் இல்லங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக இரு கட்சியினரும் குற்றம் சாட்டினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த மார்ச் மாதம் பெங்களூருவில் உள்ள வருமானவரித் துறை தலைமை அலுவலகம் முன் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, டி.கே.சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதை அடுத்து, இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டதாகவும், மக்களுக்கு இடையூறு விளைவித்த அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்த அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மல்லிகார்ஜூனா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தும் படி, போலீசாருக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பெங்களூரு வருமானவரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதற்காக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஹெச்.டி.குமாராசாமி உள்ளிட்ட 25 பேர் மீது பெங்களூரு போலீஸார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முன்னாள் போலீஸ் ஆணையர் டி.சுனில் குமார் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.