காஞ்சிபுரம், ஏப். 19- காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), திருப்பெரும் புதூர் மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 7,94,839 ஆண்கள், 8,24,306 பெண்கள், 163திருநங்கைகள் என மொத்தம் 16,19,318 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 69.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டு காஞ்சிபுரம் அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரியில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி ஒரு அறை வீதம் 6 அறைகளிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி வாக்குப் பதிவு எந்திரங்கள் ஒரு அறை என 7 அறைகளில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னையா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல்வைக்கப்பட்டது. இந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, ரிசர்வ் போலீஸ் படை, தமிழக காவல்துறை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இதேபோன்று திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 11,22,731 ஆண் வாக்காளர்கள், 11,29, 970 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 340 பேர் என மொத்தத்தில் 22,53,041 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டு தண்டலம் ராஜலட்சுமி கல்லூரியில் வைக்கப்பட்டது.அதே கல்லூரியில் மே மாதம் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.