உளுந்தூர்பேட்டை, ஏப்.24- உளுந்தூர்பேட்டை பகுதியில் வெளிச்சம் தொலைக் காட்சி செய்தியாளர் மீது முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்வூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிச்சம் தொலைக்காட்சியின் உளுந்தூர்பேட்டை பகுதி செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு மேல்நிலைக் கல்வி பயிலும் அகிலன், 10ஆம் வகுப்பு பயிலும் முகிலன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு தனது மனைவியை அழைத்துச் சென்றவர் இரவு ஒன்பது மணிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வழியில் மறைந்திருந்த சமூக விரோதிகள் கொடுவாள், கத்தி, தடி போன்ற பயங்கர ஆயுதங் களால் இவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள் ளனர். தலை, கை நெற்றி உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் சுரேஷ் கீழே விழுந்த நிலையில் இறந்து விட்டதாகக் கருதி ஓடி விட்டனர். சுமார் 15 நிமிடங்கள் சென்று அவ்வழியே வந்த நபர் மூலம் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தகவலறிந்த செம்மணங்வூர் தலித் பகுதி பொதுமக்களும், சுரேஷின் உறவினர்களும் குற்றவாளி களை கைது செய்யக்கோரி செம்மணங்கூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்தவுடன் விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவின் பேரில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், பலநூறு போலீசாரும் குவிக்கப்பட்டனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட உளுந்தூர் பேட்டையை சேர்ந்த 18 பேரை விசாரித்ததில் சத்யா என்பவரை இரவு ஒரு மணி அளவில் கைது செய்து பிற சமூக விரோதிகளை தேடி வருகின்றனர். சாதி வெறி, மோதலை தூண்டும் சாதி ஆதிக்க சமூக விரோத கும்பல் ஒன்றிடமிருந்து மார்ச் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் இரு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த நிலையில், இதன்மீது உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி மற்றும் உதவி ஆய்வாளர் அகிலன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் சாதி ஆதிக்க சக்திகளுக்கு துணையாக ஒருதலைப்பட்ச மாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது செய்தியாளர் சுரேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஎம் கண்டனம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை "தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் இப்பகுதியில் செயல்படும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை மனு அளித்து பேசப்பட்டுள்ளது. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அதன் மூலமாகவும் மனு அளித்து பேசப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பத்திரிகையாளர்கள் சங்கங்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.