புதுதில்லி:
பீகார் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அஜாய் குமார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
பீகார் மாநிலத்தில் சமஸ்டிபூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், பீகார் மாநில செயற்குழு உறுப்பினருமான அஜாய் குமார்மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப் பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. இது, கடந்த சில வாரங்களில் இவர் மீது ஏவப்பட்டுள்ள இரண்டாவது தாக்குதலாகும்.இத்தாக்குதலைத் தொடுத்த கயவர்களை உடனடியாகக் கைது செய்து,அவர்களுக்கு எதிராக கிரிமினல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. மாநில அரசாங்கம், எம்.எல்.ஏ. அஜாய் குமாருக்கு, போதுமான அளவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண் டும். இவ்வாறு இவர் மீது திரும்பத் திரும்பத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்தும் ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண் டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.