கள்ளக்குறிச்சி, ஜூன் 20- சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரம் அன்னக் கூடைகளில் பழம், கீரைகள் போன்றவற்றைக் கொண்டு வந்து பல வகைகளில் பேரம் பேசும் பொதுமக்களிடம் நயந்து பேசி பொருட்களை விற்று தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் சாலையோர வியாபாரிகளின் நிலை கொரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிப் போயுள்ளது. உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். தினசரி அதிகாலையில் தங்கள் வீடுகளிலிருந்து அன்னக்கூடை, தட்டு வண்டி, சைக்கிள், பூக்கூடை என பல்வேறு வடிவங்களில் பழம், காய்கறிகள், எண்ணெய், தின்பண்டங்கள் என பல்வேறு பொருட்களை தலையிலோ, தோளிலோ சுமந்து கொண்டு நகர்ப்புறங்களுக்கு நிரந்தர கட்டிடங்களில் இருக்கும் கடைக்காரர்களின் தயவோடு விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை ஆவதைப் பொறுத்து இவர்களின் தினசரி வருமானம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை இருக்கும் என்றும், அதில் பெரும்பகுதி தொகை தினசரி கந்துவட்டி வசூலில் கரைந்து விடுவதாகவும் கூறுகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் சாலை போக்குவரத்தை முறைப்படுத்துகிறோம் எனக்கூறி காவல்துறையினரின் பல்வேறு அடாவடி கெடுபிடிகள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றில் வரிவசூல் செய்வோர், உள்ளூர் தாதாக்கள்போல வலம்வரும் சில ஆளுங்கட்சியினர் என ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழலில் இவர்களின் வாழ்க்கை “நிற்கப் போகும் வாகனத்தின் சக்கரம் போல” மெதுவாக சுழல்கிறது. பொதுமுடக்ககால அரசின் நிவாரணம்கூட இவர்களில் பெரும்பாலோருக்கு கிடைக்கவில்லை. தினசரி நிரந்தரமில்லாத வியாபாரம் செய்வதால் இவர்களுக்கு வங்கிகளும் கடன் வழங்குவதில்லை. இதனால் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். கந்து வட்டிக்காரர்களிடம், தண்டல் கொடுப்பவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இவர்களின் குடும்பத்தில் திடீர் இறப்புகள் நேரும்போது அடுத்த சில நிமிடங்களில் கந்துவட்டிக்காரர்கள் அவர்களின் இருப்பிடத்திற்கே வந்து 10 முதல் 25 சதவீத வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர்.
பெரும்பாலும் இப்படிப்பட்ட சாலையோர வியாபாரத்தில் பெண்களே ஈடுபடுவதால் அவர்கள் குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய சூழலில் “ஆலைக்குள் அகப்பட்ட சோலை கரும்பு” போல விரைவிலேயே உடல் நலம் குன்றி நோய்வாய்ப்படும் சூழலும் நிலவுகிறது. “நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை” என்பதைப்போல எவ்வளவுதான் உழைத்தாலும் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் போன்ற திட்டங்களை முறைகேடுகள் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும். “ஆடி ஓய்ந்த பம்பரம்” போன்ற இவர்களின் சோர்வு நீங்கி வாழ்க்கைக் கனவுகள் நிறைவேறுமா?
-வி.சாமிநாதன்