கடலூர், ஏப்.7-
தேர்தல் நடவடிக்கையால் கைப்பற்றப்பட்ட பணம் 3.33 கோடியை திரும்பப் பெற சிறுவணிகர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 63 தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டமன்றம் வாரியாக 9 தொகுதிகளில் தலா 7 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தலா 3 பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்புக்குழு இப்பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகிறது.இக்குழுவினர் கடந்த 5 ஆம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் ரூ.4,92,66,547 ரொக்கம் பறிமுதல் செய் துள்ளனர். ரூ.1,97,580 மதிப்பில் சேலைகள், பாத்திரம், தொப்பி உள் ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட மொத்த மதிப்பு ரூ.4.95 கோடியாக உள்ள நிலையில் இவைகளில் பெரும்பாலானவை சிறு வணிகர்கள், பொதுமக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பொருளாகவே உள்ளன. மிகச் சொற்ப அளவில் மட்டுமே அரசியல் பிரமுகர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். அதுவும் அவர்கள் அரசியல் காரணங்களாக எடுத்துச் சென்றதாக இல்லாமல் அவர்களது சொந்த அலுவலக பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்ற தொகை தான்.தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் இதர பரிசுப் பொருட்கள் வழங்கிடக் கூடாது என்பதை கண்காணிப்ப தற்காகவே இந்த கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இக்குழுவினர் பெரும்பாலும் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்கள், கடலை, முட்டை வியாபாரிகள், சிறுவணிகர்கள் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து விடுகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்கள் காண் பித்தால் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் நடத் தும் அலுவலர் தெரிவித்து வருகிறார். ஆனால், அந்த நடைமுறையானது மிக நீண்ட நெடிய தூரத்தில் அமைந் துள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் ரூ.1.59 கோடி மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்படைக் கப்படாத தொகை மட்டும் ரூ.3.33 கோடியாக உள்ளது.குறிப்பாக, பண்ருட்டியில் தனியார் பால் நிறுவனத்தின் வேனை பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர். அதன் ஓட்டுநரிடமிருந்து ரூ.1,28,980 பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நிறுவனம் சார்பில் தேர்தல் அலுவலர்களைத் தொடர்புக் கொண்டு மாவட்ட ஆட்சியரகம் வந் துள்ளனர். ஆனால், பண்ருட்டியிலிருந்து தங்களுக்கு தகவல் வரவில்லையெனவும் பல்வேறு காரணங்களைக் காட்டியும் பணம் திரும்ப வழங்கப் பெறவில்லை. பொதுவாக, பறிமுதல் செய்யப்படும் பணத்தை விடுவிக்கும் குழுவாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் பணியில் இல்லையென்றாலும் உரிய ஆவணங்கள் எடுத்து வருபவர்கள் அலைக்கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்று ஆவணங்களுடன் அலைந்து கொண்டிருப்பவர்கள் அனைவருமே சிறு வியாபாரி களும், சொந்த பயன்பாட்டிற்காக ரூ.1 லட்சத்திற்கும் குறைவான தொகையை எடுத்துச் சென்றவர்களாகவுமே உள்ளனர்.
மேலும், வங்கியாளர்களையும் ஆவணங்களுடன் அலைவதைக் காண முடிகிறது.எனவே, தேர்தல் நன்னடத்தை விதிகள் என்ற பெயரில் எதற்கு சோதனை நடத்தப்பட வேண்டுமோ அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் குழுக்களின் செயல் பாடு அமைய வேண்டும். உரிய ஆவணங்கள் கொண்டு வருவோரிடம் உடனடியாக பணத்தை திரும்ப வழங்குவதோடு, உரிய ஆவணங்கள் கொண்டு வர முடியாமல் சிறிய அளவில் பறிகொடுக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்குவதற்கு தனிக்குழு ஏற்படுத்த வேண்டுமென பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் கேட்டுக்கொண் டுள்ளனர்.