கடலூர், மார்ச் 11- மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள மேல்கு மாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆ.அன்பழகன் (63). இவர், கடந்த 3-7-2018 அன்று அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வாய்பேச முடியாத, நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி இருந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமிக்கு வைத்தியம் பார்ப்பதாகக் கூறி, சிறுமி மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சகோதரர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். உடனே அன்பழகன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், அன்பழகனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்தார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக சிறப்பு வழக்குரைஞர் தி.கலாசெல்வி கூறினார்.