சிதம்பரம், ஜூன் 7 - சிதம்பரம் தோழர் வி. நடராஜன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர முன்னாள் செயலாளராக பணியாற்றிய வி.நடராஜன் சனிக்கிழமை மாலை மாரடைப்பால் அகாலமரணம் அடைந்தார். அவர் மாணவர் பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் இணைத்துக்கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு மாணவர்களை திரட்டுவதற்கு மிகப் பெரிய பங்காற்றினார். அதன்பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்க்குழு, சிதம்பரம் நகர செயலாளராக இரண்டு முறையும், மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றி கட்சியையும் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளை கட்டுவது என அரும்பணியாற்றினார்.
அவருடைய தந்தை எஸ்.வி.ரத்தினம் மிகவும் மூத்த தோழர். மார்க்சிஸ்ட் கட்சியின் துவக்க கால நகரச் செயலாளராக 1970 - 71 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர். அவரும் கடைசிவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். அதேபோல் அவருடைய மகன் நடராஜன் கட்சியிலும், சமூக இயக்கங்களிலும் தொடர்ந்து பணியாற்றினார். அவருடைய இறப்பு என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு அவரது பிரிவால் வாடும் அவரது துணைவியார் புஷ்பலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.