tamilnadu

img

குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு

கொழும்பு, ஏப்.23-இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று (ஈஸ்டர் தினம்) 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 9 இடங்களில் நடை பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்து 350-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 45 பேர் குழந்தைகள் என யுனிசெப் கூறியுள்ளது. திங்களன்று மாலை வரை சுமார்ஒன்பது இடங்களில் குண்டு வெடித்துள் ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் 40 பேர் வரை கைதுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவல்துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலை அடுத்து செவ்வாயன்று (ஏப்ரல் 23) இலங்கையில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.


விசாரணைக்கு உதவும் இன்டர்போல்


இந்தச் சம்பவம் தொடர்பான விசார ணைக்கு உதவத் தயாராக இருப்பதாக இன்டர்போல்எனப்படும் சர்வதேச காவல் துறை அறிவித்திருக்கிறது.இலங்கையில் நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐஜி என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவை அதிபர் மைத்ரி பால சிறிசேனா அமைத்துள்ளார். குண்டு வெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்நிலையில், இலங்கைத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இன்டர்போல், இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திவரும் விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இன்டர்போல் ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை குண்டுவெடிப்பு சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண் பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகிய வற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்” என தெரி வித்துள்ளது.இதற்கிடையே இந்தச் சம்பவத்துக்குத் தொடர்புடைய 26 பேர் குற்றப் புலனாய்வுத் துறையாலும், மூன்று பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், ஒன்பது பேர் போலீ சாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னெச்சரிக்கையும் மன்னிப்பும்


இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னரே எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது.இது தொடர்பாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சருமான ரஜித சேனரத்னே தெரிவிக்கையில், ‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது. இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என்றார்.முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இலங்கை அரசு திங்களன்று இழப்பீடு அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 


இந்தியர்கள் 10 பேர் பலி


இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ,இந்தியா, வங்கதேசம் ஆகிய வெளிநாடு களை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்திவெளியானது. இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இலங்கை குண்டுவெடிப்புகளில் வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, எச்.சிவக்குமார் என்ற 5 இந்தியர்கள் உயிரி ழந்திருப்பதாக கொழும்புவில் உள்ள இந்தியதூதரகம் திங்களன்று தெரிவித்தது. இந்நிலை யில், மேலும் ஹெச்.மாரிகவுடா, ஹெச்.புட்ட ராஜா ஆகிய 2 இந்தியர்கள் பலியானதாக செவ்வாயன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  


3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்


டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (46). இவருக்குநான்கு குழந்தைகள் உள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின்முதல் கோடீஸ்வரர். பல்வேறு தொழில் நிறுவனங்கள் இவருக்கு உள்ளன. இவரின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இதனால் குழந்தைகளை பறி கொடுத்துவிட்டு அவர் கண்ணீர் மல்க நிற்கிறார்.


கூட்டாக அடக்கம்


இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் களின் உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் நிகழ்வு தொடங்கியுள்ளது. நீர் கொழும்பில் உள்ள செபாஸ்தியன் தேவாலயத்தில் இந்த கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றது.


கொழும்பில் வெடிகுண்டு லாரி நுழைவு?


இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு அச்சத்திலிருந்து மக்கள் வெளிவராத நிலை தொடர்கிறது. இலங்கையின் கொழும்பு நகருக்குள் முழுவதும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி, வேன் நுழைந்துள்ளது என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பு நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.