ஜெய்ப்பூர்
முதல்வர் அசோக் கெலாட் - முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோரின் அதிகார மோதலால் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சச்சின் பைலட் தனது 19 எம்எல்ஏ-களுடன் இணைந்து அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சி அவரக்ளை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தது. சச்சின் பைலட் தரப்பு உயர்நீதிமன்றம் சென்றது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியது. அதில்,"சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இதனால் முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆளுநர் இசைவதாக தெரியவில்லை.
இந்நிலையில், ஜோத்பூர், பிகானீர், கோட்டா போன்ற முக்கிய நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்ற கோசத்தின்படி மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கொரோனா பதற்றத்துக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தொண்டர்கள் அதிகளவில் கூடியுள்ளனர்.