tamilnadu

img

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம்!

சவூதியில் 60 சதவீத கச்சா எண்ணெய் நாசம்

ரியாத், செப்.17- சவூதி அரேபியாவில் அரசு எண்ணெய் நிறுவனமான ஆராம்கோவின் கிடங்குகளில் தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உற்பத்தியில் 60 சதவீத கச்சா எண்ணெய் தீயில் கருகி நாசமானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதலுக்குப் பின், திங்களன்று தொடங்கிய முதல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 60.26 டாலரில் இருந்து 71.57 டாலராக உயர்ந்தது.

ஒரே நாளில் ஏற்பட்ட 19 சதவீத உயர்வு 1991-ஆம் ஆண்டு வளைகுடா போருக்குப் பின் அதிகபட்ச உயர்வாகும். 1991-ஆம் ஆண்டு ஈராக் குவைத் மீது படையெடுத்த போது இரு நாடுகளிலும் ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தி இழப்பு மற்றும் 1979 ஈரானில் இஸ்லாமியப் புரட்சியின்போது ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தி இழப்பு ஆகியவற்றை விட சவூதியின் தற்போதைய இழப்பு அதிகம் என சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா, 83 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. 46.6 சதவீதம் ஈராக்கில் இருந்தும் 40.3 சதவீதம் சவூதி அரே பியாவில் இருந்தும் 23.9 சதவீதம் ஈரானில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்ற போதும் விலையில் ஏற்படும் நிலையற்ற தன்மையை தவிர்க்க முடியாது என இந்தியா வுக்கான இரண்டாவது பெரிய எண்ணெய் விநியோக நாடான சவூதி தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீதத்துக்கும் அதிக உயர்வு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், விலைவாசியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.