இந்தியா மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் இருக்கிறதாக நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த டாடா ஸ்டீல் இலக்கியக் கூட்டத்தின் அமர்வில் கலந்த கொண்டு பேசிய பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் உள்ளதா என்று கேட்டால், அதனை இல்லை என்று கூறும் அளவுக்கு நம்மிடத்தில் எந்த தரவுகளும் இல்லை என்று கூறினார். அதேபோல், முறைசாரா துறையில் எந்தவித புதிய நம்பகமான பதிலும் இல்லை. இரு சக்கர வாகன விற்பனையானது மிக மந்தமாக இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் பெரிய மந்த நிலையை காணலாம் என்றும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், இந்தியா 1991ல் நிலவி வந்த நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள் அனைத்தும் 1991ஐ விட மோசமாக இருப்பதாக கூறியிருந்தார். அவரின் இந்த கருத்தையும் அபிஜித் பேனர்ஜி நினைவு கூர்ந்தார்.
மேலும் பேசிய அவர், சொத்து வரி விதிப்பையும், அதனை மறுபகிர்வு செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், வங்கித் துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கான நிதி உதவியை அரசு செய்ய வேண்டும் என்றும், கார்ப்பரேட் வரிகளை அரசாங்கம் சமீபத்தில் குறைத்த நிலையில், கார்ப்பரேட் துறை பெரும் பணத்தில் அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்தார்.