tamilnadu

img

முப்பெரும் நெருக்கடிகளும், முகம் கொடுக்காத மத்திய பட்ஜெட்டும் - பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்தியப் பொருளாதாரம் கடும் மந்தநிலையில் உள்ளது. மிக வலுவான முறையில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. 2019 பொருளாதார ஆய்வறிக்கையின்படி அதிகாரப்பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே கூட அதுதான் நிலைமை. சமீப காலமாக அந்த தரவுகளின் நம்பகத் தன்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தை விலைகளின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் மட்டும் 2018-19 ஆம் நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு முதல் தொடர்ந்து வந்த ஐந்து காலாண்டுகளின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் (GVA – GROSS VALUE ADDED) வளர்ச்சியின் அடிப்படையி லும் உருவாக்கப்பட்ட தரவுகள் இவை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

மறைக்கப்படும்  மும்முனை நெருக்கடிகள் 

பொருளாதாரத்தின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை  துறைகளில் (வேளாண் மற்றும் தொழில் துறைகள்) வளர்ச்சி விகிதம் மிக அதிகமான அளவில்  வீழ்ச்சிய டைந்துள்ளது; அதுமட்டுமல்ல, சேவைத் துறையும் கணிச மான அளவிற்கு வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சியடைந்துள் ளது. ஆட்டோ மொபைல்களில் துவங்கி, பிஸ்கட்டுகளில் துவங்கி, வேகமாக நகரும் நுகர்பொருள்கள் வரையிலும் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் பொருள்க ளுக்கான கிராக்கி என்பது மிக கூர்மையான முறையில் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை இந்தியாவின் பெரும்  தொழிலதிபர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இந்திய பொரு ளாதாரத்தின் இந்த நெருக்கடியும், வீழ்ச்சியும், பெரும் தாக்குதலாக வந்த இரட்டை அதிர்ச்சிகளால்தான் ஏற்பட்டது என்ற ஒரு பொது கருத்திற்கு கிட்டத்தட்ட எல்லோரும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அந்த இரட்டை அதிர்ச்சிகள் என்ன? ஒன்று, பண மதிப்பு நீக்கம் என்ற பேரழிவு. இதன் விளைவாக நாட்டின் முறைசாரா துறைகள் ஒட்டுமொத்தமாக மிக கடு மையான தாக்குதலுக்குள்ளாகின. வேலைவாய்ப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இரண்டு, அவசர கதியாகவும், முறை யான திட்டமிடல் இன்றியும் முழுமையாக வரையறை செய்யப்படாமலும், அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி. 

வருடாந்திர உழைப்பு சக்தி தொடர்பான சர்வே 2017-18 (Periodic Labour Force Survey)யின் படி வெளி யான முடிவுகளைப் பார்த்தால் பொது வெளியில் இந்த அரசாங்கத்தால் சந்தோசமாக அதை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கே இருந்தது. ஏனென்றால் அந்த விபரங்களின்படி வேலையின்மை விகிதம் 1970ஆம் ஆண்டுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களு டன் ஒப்பிடும் போது மிக மிக அதிகமாக இருந்தது. 

மிக சமீப காலத்தில், அதாவது 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் தேசிய புள்ளியியல் அமைப்பின் வழி காட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட, தேசிய குடும்ப நுகர்வோர் செலவினம் குறித்த சர்வேயின் முடிவுகளும்கூட, மிக மிக துயரகரமான உண்மையையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அதாவது, கிராமப்புற இந்தியாவில் சராசரி தனிநபர் நுகர்வோர் செலவினம் என்பது 8.8 சத வீதம் அளவிற்கு மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள் ளது; நகர்ப்புறத்தை பொறுத்தவரை இதைவிட கூடுதலாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதங்கள் ஓரளவிற்கு ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக சொல்லப்பட்ட காலத்தில் தான் இந்த விளைவு கள் வந்துள்ளன. மேலும், விவசாய பெருமக்கள் எதிர் கொண்டிருக்கும் மிகப் பெரிய அளவிலான தொடரும் துயரம் என்பது, இந்தியப் பொருளாதாரத்தின் கருப்பு அத்தி யாயமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. 

பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் சூழ்ந்து கொண்டி ருக்கும் நிலையில், 2019 டிசம்பரில் பணவீக்க விகிதங்களும் உச்சத்தை எட்டிவிட்டது என்ற செய்திகளும் வெளியாயின. உணவு பணவீக்கம் 14 சதவீதத்தை எட்டிவிட்டது.  எனவே மத்திய பட்ஜெட்டிலிருந்து நாம் என்ன எதிர்பார்த் திருக்க முடியும்? இந்த பட்ஜெட், மேலும் மேலும் ஆழ மடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி சரிவு, மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேலையின்மை மற்றும் நகர்ப் புறங்களிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலும் உள்ள பெருவாரியான தொழிலாளர்கள், சிறு, குறு உற்பத்தியா ளர்கள் உள்ளிட்ட மக்கள் திரளின் வாழ்வாதாரங்கள் தகர்க் கப்பட்டு சீர்குலைந்து கிடப்பது ஆகிய இந்த மூன்று நெருக்கடிகளை தீர்ப்பதற்கு வழிசொல்ல வேண்டு மென்றுதான் எதிர்பார்க்க முடியும். இன்னும் குறிப்பாக நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கான கிராக்கி யில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை அர சாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும், கிராக்கியை உயர்த்த முயல வேண்டும்  என்றுதான் எதிர்பார்க்க முடியும். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட் அந்த பாதையில் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. 

திக்கு தெரியாத காட்டில் ....

பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

2019 ஜூலையில் மோடி தலைமையிலான இரண்டா வது அரசு பொறுப்பேற்ற பின்னர் 2019-20க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட எண்களும், விபரங்களும் நம்பகத்தன்மை அற்றவை என்பது விரைவில் அம்பலமானது. அதுமட்டுமல்ல, பின்னர் 2019-20க்கான வரி வருவாய் இனங்கள் குறித்த திருத்திய மதிப்பீடுகளிலும் இது தொடர்பாக 2020-21 பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள கணக்குகளும் எந்தவிதத்தி லும் நம்பத்தகுந்ததாக இல்லை. அதேவேளை, அதி காரப்பூர்வமான ஒதுக்கீடுகளின்படியே பார்த்தாலும், இந்த பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்திற்கு தூண்டுகோலாக அமையும் விதத்தில் எதையும் முன்வைக்கவில்லை.  2020-21ஆம் ஆண்டுக்கான மொத்த செல வினத்திற்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.30.42 லட்சம் கோடி ஆகும். இது 2019-20ஆம் ஆண்டில் ரூ.27.86லட்சம் கோடி யாக இருந்தது. கடந்தாண்டிலிருந்து இந்தாண்டு சற்று உயர்வு காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த சொற்ப உயர்வு நிகழ்ந்தாலும் கூட மத்திய அரசின் மொத்த செலவு நாட்டின் ஜிடிபி யின் விகிதமாக குறையவே செய்யும். கிராக்கியை உயர்த்த உதவாது.  

2019-2020ன் அனுபவம் என்ன? செலவினம் தொடர்பாக திருத்தப்பட்ட மதிப்பீடு, பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.88 ஆயிரம் கோடி அளவிற்கு குறைவாக இருந்தது; அப்படியானால், செலவினம் என்பது பட்ஜெட்டில் தற்போது கூறப்பட்டுள்ளதைவிட மிக குறைவாகத்தான் இருக்கப் போ கிறது என்பதை எவராலும் எளிதாக கணக்கிட முடியும். அதேபோல, 2020-21க்கான வரி வருவாய் அனுமானம் குறித்த கணக்குகளும், மிகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் அரசு மீண்டும் என்ன சொல்லப் போகிறது என்றால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது; எனவே நிதி பற்றாக்குறை இலக்குகளை எதிர்கொள்ள மிக முக்கியமான- உயிர் ஆதாரமான துறைகளுக்கு செய்யப்பட வேண்டிய செலவினங்களை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லப் போகிறார்கள். இது இந்த பட்ஜெட் மதிப்பீட்டிலே கூட பகிரங்கமாக முன்மொழியப்பட்டுவிட்டது. குறிப்பாக 2019-20 பட்ஜெட்டில் உணவு மற்றும் பொது வினியோக அமைச்ச கத்திற்கான செலவின ஒதுக்கீடு ரூ.1,92,240 கோடியாக இருந்தது; பின்னர் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் குறைக்கப்பட்டு ரூ.1,15,240 கோடியாக வெட்டப்பட்டது; அதேபோல மகாத்மா  காந்தி தேசிய கிராமப்புற வேலையுறுதி திட்டத்திற்கு 2019-20 பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.71 ஆயிரம் கோடியாக இருந்தது; இது 2020-2021 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.61,500 கோடியாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவையனைத்தும் முற்றிலும் ஏழைகளுக்கு விரோதமானவையாகும்.

மாநிலங்கள் மீது கூடுதல் சுமைகள் 


அரசு முனைப்புடன்  முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக முதலீடு என்ற பெயரில் ஏற்கெனவே வந்த அறி விப்புகள் மீண்டும்  முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போதிலிருந்து 2024-25 வரையான காலத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடாக ரூ.102 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இது உள்நாட்டில் பொருள்களுக்கான கிராக்கியில் மிகப் பெரிய உந்துதலை ஏற்படுத்தும் என்றும் விவசாயத்துறையின் தேவைகளையும்கூட பூர்த்தி செய்ய முடியும் என்றும் அரசாங்கம் தம்பட்டம் அடித்திருக்கிறது. ஆனால் இது ஓட்டை பலூனில் அடைத்த காற்றைப் போன்றது. இந்த பெரும் நிதி அறிவிப்பில், 39 சதவீதம் அளவிற்கு மாநில அரசுகள் பங்களிப்பு செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. எப்படிப்பட்ட நிலையில்? மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி விகிதங்க ளை கணிசமான அளவிற்கு குறைத்துவிட்டு, மாநிலங்க ளுக்கு எந்த வருமானமும் சென்றடையாத விதத்தில் மத்திய அரசு நிதிக் கொள்கைகளை பின்பற்றுவதன் விளை வாக மாநிலங்களின் நிதி நிலவரம் மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலில்தான், மாநிலங்கள் பங்களிப்பு செய்ய வேண்டுமென மத்திய அரசு எதிர்பார்க்கி றது. இதில் மத்திய அரசு 39 சதவீதம் பங்களிப்பு செய்யுமாம், எஞ்சியுள்ள 22 சதவீதத்தை தனியார்துறை பங்களிப்பு செய்யுமாம், இவையெல்லாம் கதைக்கு உதவாத பேச்சு, நடக்கப்போவதில்லை என்பது சிதம்பர ரகசியம். 

விவசாயத்துறையிலும், கிராமப்புற அடிப்படை கட்ட மைப்புக்களை மேம்படுத்துவதிலும், முதலீடுகளை கணிசமான அளவிற்கு அதிகரிப்பதன் மூலம், விவசாய நெருக்கடிக்கு தீர்வு காணவோ அல்லது வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை விரிவுபடுத்தவோ செய்வதன் மூலம், பெருவாரியான மக்கள் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரித்து அதன் மூலம் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து நெருக்கடியை தீர்ப்பதற்கான எந்த வழியையும் இந்த பட்ஜெட் முன்வைக்க வில்லை. அது மட்டுமல்ல, 2019 ஜூலையில் 2019-20க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அடுத்த மூன்று மாதக் காலத்திற்குள்ளேயே, இந்த அரசாங்கம் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை சலுகையாக வாரி வழங்குவது என முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. குறிப்பாக ரூ.1.45 லட்சம் கோடியை கார்ப்பரேட் வரி குறைப்பு என்ற வகையில் அரசாங்கம் இழந்தது. ஏற்றுமதி தொடர்பான சலுகைகள் என்ற பெயரிலும் ரூ.50 ஆயிரம் கோடியை இழந்தது.  இந்நிலையில் இந்த பட்ஜெட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அந்நிய மூலதனத்திற்கும் மேலும் புதிய வரிச் சலுகைகளையும், இதர சலுகைகளையும் அளித்திருக்கிறது. நிதி பற்றாக்குறை இலக்குகளை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் உத்தி என்ன வென்று சொன்னால், மிகப் பெரிய அளவில் பொதுத்துறை சொத்துக்களை விற்பது என்பதுதான். 2021 பட்ஜெட், பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டலாம் என கணக்குப் போட்டிருக்கிறது. பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு எந்தவித நியாய மான பொருளாதார காரணத்தையும் முன்வைக்க அவசிய மில்லை, மக்கள் சொத்தை மானாவாரியாக அரசு விற்க லாம்  என்ற மோசமான நிலைபாட்டிற்கு (விதேசி) மத்திய அரசு வந்து சேர்ந்திருக்கிறது. இது உண்மையிலேயே ஒரு பேரழிவுப் பாதை. 

பட்ஜெட்டில் பிரதிபலித்துள்ள மத்திய பாஜக அரசாங் கத்தின் கொள்கைகள், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளவோ, கிராமப்புற பொருளாதாரத்திற்கு உயிரூட்டவோ உதவி செய்யாது. மிக பெருவாரியான வெகுஜன வேலை யின்மை என்ற நெருக்கடியை எதிர்கொள்ள அவர்களி டம் எந்தத் திட்டமும் இல்லை. நம்நாடு எந்த அளவிற்கு பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப சுயசார்பை எட்டியி ருக்கிறதோ, பல பத்தாண்டு காலமாக நாட்டு மக்கள் அதை எப்படியெல்லாம் கட்டி வளர்த்தார்களோ அதையெல்லாம் அடித்து நொறுக்கி பலவீனப்படுத்தும் விதத்தில் நாட்டில் ஏற்றத்தாழ்வையும், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமைகுவிப்பு, பொதுத்துறை அழிப்பு என்ற கொடூர மான நிலைமைக்கு பொருளாதாரத்தை சீர்குலைவான இடத்திற்கு தள்ளியிருக்கிறது மத்திய அரசு.

எனவே 2020-21 மத்திய பட்ஜெட்டானது, இந்தியப் பொருளாதாரத்தை பீடித்துள்ள நோயை ஆராய்வதிலும் சரி, அதற்குரிய மருந்தை அளிப்பதிலும் சரி இரண்டி லும் முற்றாக தோல்வியடைந்துள்ளது. இது மக்களுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் ஆபத்தை கொண்டிருக்கி றது, இவ்வுண்மைகள் அனைத்தும் அவர்கள் உண்மை களை மறைக்க  முன்வைத்துள்ள பொய்யான புள்ளி விபரங்களையும் மீறி அப்பட்டமாக வெளிப்படுகிறது.