tamilnadu

img

இந்நாள் மே 23 இதற்கு முன்னால்

1638 - கண்டி அரசர் இரண்டாம் ராஜசிங்கேவுக்கும், டச்சு கடற்படைத் தளபதிகளுக்குமிடையே, ‘கண்டிய ஒப்பந்தம்’ ஏற்பட்டது. போர்ச்சுக் கீசியர்களுக்கு எதிராக டச்சுக்காரர்களை உதவிக்கு அழைத்த இந்த ஒப்பந்தமே, பின்னாளில், டச்சு ஆளுகையை ஏற்படுத்த வழிவகுத்தது. இலங்கைக்கு முதன்முதலில் வந்த ஐரோப்பியர்கள், போர்ச்சுக்கீசியர்களே. 1505இல் இவர்கள் வந்திறங்கியபோது, தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த 7 சிறு நாடுகளாக இலங்கை இருப்பதையும், அந்நியர் நுழைவதைத் தடுக்கும் நிலையில் அவர்கள் இல்லையென்பதையும் புரிந்துகொண்டனர். 12 ஆண்டுகளில் (1517இல்), துறைமுக நகரமான கொழும்புவில் ஒரு கோட்டையை நிர்மாணித்துவிட்ட போர்ச்சுக்கீசியர்கள், கடலோரப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினர். உள்ளூர் அரசுகளிடையே இருந்த பகைமையைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களைத் தங்கள் கைப்பாவையாக்கியும், பிற பகுதிகளை நேரடி ஆளுகையின்கீழ் கொண்டுவந்தும், முக்கால் நூற்றாண்டுக்குள், இலங்கையின் பெரும்பகுதியை ஆளத் தொடங்கியிருந்தனர். கண்டி அரசிற்கு போர்ச்சுக்கீசியர்கள் நியமித்த கைப்பாவை அரசர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணிக்க, கண்டியைவிட்டு வெளியேற நேர்ந்த அவர்கள், மிகப்பெரும் படையுடன் போர்தொடுத்தனர். கண்டியின் கெரில்லா போர் முறையால் மோசமான சேதத்தை போர்ச்சுக்கீசியர்கள் சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் தொடுத்த போர்களால், இருதரப்புமே நெருக்கடியிலேயே இருக்க நேரிட்டதால், 1621இல் கண்டியின் சுதந்திரத்தை உறுதி செய்து, ஆனால், திரை செலுத்துவதாக ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தனர்.

1621இல் எஞ்சியிருந்த வன்னி நாட்டையும் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றியிருந்தனர். இதற்கிடையில் இங்கு வந்தாலும், காலூன்ற முடியாமல் டேனிஷ்காரர்கள்(டென்மார்க்), இந்தியாவின் தரங்கம்பாடிக்கு ஓடியது தனிக்கதை! போர்ச்சுக்கீசிய வணிகத்தின் அளவை, எதிர்பாராமல் அறிய நேரிட்டு, அதிர்ச்சியுற்றே ஆங்கிலேய, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் தொடங்கப்பட்டன. போர்ச்சுக்கீசியர்களின் வணிகப் பகுதிகளில் டச்சு கிழக்கிந்திய, மேற்கிந்திய கம்பெனிகள் தொடுத்ததே டச்சு-போர்ச்சுக்கீசியப் போர். வணிகத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம், போர்ச்சுக்கீசியர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை மீட்டுத்தரவும், கைமாறாக இலங்கையில் வணிகத்துக்குத் தனியுரிமை அளிப்பதாகவும்தான் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், இதைப் பயன்படுத்தி, 1658இல் போர்ச்சுக்கீசியர்களுக்குப் பதிலாக டச்சுக்காரர்கள் ஆளத்தொடங்கினர்.

- அறிவுக்கடல்