tamilnadu

img

ரஜினியை வைத்து தமிழருவி எடுக்கும் மெகா காமெடி படம்....

நடிகர் ரஜினிகாந்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இனி அவர் கட்சி பற்றி அறிவிக்கும் வரை வாயை திறக்கமாட்டேன். நான் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்துவிட்டு போகிறேன் என்று கடந்த மாதம் அறிவித்தார் தமிழருவி மணியன். அவரது இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் ரஜினி இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று குறுக்கும் மருக்குமாக ஓடி இம்சை செய்து கொண்டிருந்த நிலையில், அநேகமாக, மணியனின் தொல்லை இனி இருக்காது என்று சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடினர். 

நான் ஒன்றும் ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளர் அல்ல என்று கூறிய அவர், சில நாட்கள் பேசாமல் இருந்தார். ஆனால், அவரால் முடியவில்லை. சமீபத்தில் தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினி. அங்கு, என்ன பேசப்பட்டது? என்று தெரியவில்லை. ஆனால், செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி ஒரு விசயத்தில் எனக்கு ஏமாற்றம்தான், அது என்ன விஷயம் என்பதை பிறகு கூறுகிறேன் என படத்திற்கு இடைவேளை விடுவது போல அறிவித்து விட்டு போனார். 

ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஒரு பெரும் ஊடகப் பட்டாளம் 24x7 காத்திருக்கிறது. அவர், வீட்டை விட்டு வெளியே வந்தால் அது ஒரு பிரேக்கிங் நியூஸ். வெளியே வராவிட்டால், அதுவும் ஒரு பிரேக்கிங் நியூஸ் என்ற ரீதியில் பீதியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ஏமாற்றம் அடைந்தது எந்த விசயத்தில் என்று காட்சி ஊடகங்களில் பலரும் கதறித் தீர்த்தனர். ரஜினிகாந்தே இதைப் பார்த்திருந்தால், தாம் எந்த அளவுக்கு ஏமாறிக் கொண்டிருக்கிறோம் என்று அதிர்ச்சி அடைந்திருப்பார். 
ரஜினி அவ்வப்போது திருக்குறள் போல எதையாவது வாயில் வந்ததை சொல்லிவிட்டுப் போக, பின்னாலேயே தமிழருவி மணியன் வந்து, பரிமேலழகர் போல பக்கம் பக்கமாக உரை எழுதுவார். இப்போது ரஜினி ஏமாந்தது எந்த விசயத்தில் என்று மணியன் உரை எழுதி, வெளியிட்டுள்ளார். தன்னுடைய மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மக்களைச் சென்று சந்திக்கவில்லை என்பதுதான் ரஜினிக்கு ஏமாற்றம் என்று ரஜினியே பின்னர் கூறியதாக, ஒரு ரகசியத்தை இவர் போட்டு உடைத்திருக்கிறார். ரஜினிகாந்த் என்னவோ, தினந்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு பணியாற்றிக் கொண்டிருப்பதை போலவும் அவரது மன்றத்தினர்தான் மக்களைச் சந்திக்காமல் இமயமலைக்கு பயணமாகி விட்டதைப் போலவும் ஆதங்கப்படுகிறார் இவர்.

ரஜினிகாந்த் பல படங்களில் காமெடியாக நடித்திருக்கிறார். ஆனால், அவரை வைத்து தமிழருவி மணியன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் படு காமெடியாக இருக்கிறது. தன்னுடைய மன்றத்தினரை சந்தித்து பேசியபோது, கட்சி ஆட்சிக்கு வந்தால், நான் அதிகாரத்துக்கு வரமாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறினாராம். கட்சியை வேண்டுமானால் நான் கவனித்துக் கொள்கிறேன்; முதல்வர் பதவியை வேறு யாராவது கவனித்துக் கொள்ளட்டும் என்றாராம். ஆனால், இதை மன்றத்தினர் ஏற்கவில்லையாம். மன்றத்தினர் நீங்கள் முதல்வராக வேண்டும் என்று ரஜினியிடம் கண்டிப்பாக கூறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் மணியன். 

மணியன் அந்தக் கூட்டத்திற்கு போனதாக தெரியவில்லை. ஆனால், வாயை திறக்கமாட்டேன் என்று மண்ணில் புரண்டு சத்தியம் செய்தவர், கால்வாய் அளவுக்கு வாய் திறந்து அள்ளிவிடுகிறார். இவர் தனது பங்கிற்கு, ரஜினி என்னை உட்பட வேறு யாரையும் முதல்வராக அறிவிக்கக் கூடாது, நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சனை ரஜினி, கட்சித் தலைவராக இருப்பதா? அல்லது முதல்வராக இருப்பதா? என்பதுதான். மணியன் கண்ணீர் விட்டு கதறுகிறார் ரஜினி எப்படியாவது முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டுமென. இவர் சொல்லும் கட்சி எங்கே இருக்கிறது என்று கேட்டால், அது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள், ஆட்சியைப் பிடித்து விட்ட மாதிரி
யும், எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்து கொண்டிருப்பது மாதிரியும், ரஜினி மறுப்பது மாதிரியும் மன்றத்தினரும் இவரும் போயஸ் தோட்டத்தின் நெடுவாசலில் நின்று கெஞ்சுவது மாதிரியும் கற்பனையாக பாவித்துக் கொண்டு பேசுவதைப் பார்க்கும் போது இவர் வாய் திறக்காமல் இருப்பது, இவரது வாய்க்கு மட்டுமல்ல, தமிழக மக்களின் காதுகளுக்கும் நல்லது என்று தோன்றுகிறது. காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரை இன்னமும் இவர் கைவிடாத நிலையில், காந்தியை நம்பி இந்தியாவே பின்னால் வந்தது; அதுபோல தமிழகம் ரஜினியின் பின்னால் வர வேண்டும் என்கிறார். காந்தி ஏற்கனவே பாஜகவினரால் கடுமையாக காயம்பட்டிருக்கும் நிலையில் இவரும் தன் பங்கிற்கு கல்லெறியாமல் இருப்பது நல்லது. 

ரஜினியின் கொள்கைகளை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக ஒரு யுகப்புரட்சி நடத்த வேண்டும் என்கிறார் மணியன். ரஜினியிடம் சென்று உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால், எனக்கு தலைசுற்றுகிறது என்கிறார் அவர். இவரோ, இந்த தலைசுற்றும் கொள்கையை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என்கிறார். ரஜினியின் கொள்கைகள் என்ன என்பதை இவராவது முதலில் தெளிவுபடுத்தட்டும்.ரஜினிகாந்த் ஒன்றும் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் வருகிறார் என்கிறார் மணியன். கடைசியாக ரஜினி நடித்து வெளிவந்த தர்பார் படத்தின் விநியோகிஸ்தர்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். அவர்களுக்கு உரிய தொகையை மணியன் பெற்றுக் கொடுத்துவிட்டால், பெரிய உதவியாக இருக்கும். வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதாக ரஜினிகாந்தே கூறியுள்ள நிலையில், அந்தப் பணத்தை பெறுவது மணியனுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால், சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் மணியன் கூறியிருக்கிறார். இதிலிருந்தே இவரது சாயம் வெளுத்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் முதல் போராட்டமே இந்தியர்களின் குடியுரிமை தொடர்புடையதுதான். தமிழருவி மணியன் குறைந்தபட்சம் காந்திய மக்கள் இயக்கம் என்கிற பெயரையாவது கைவிடுவது காந்திக்கு செய்கிற கவுரவமாக இருக்கும்.

=== மதுக்கூர் இராமலிங்கம்===