tamilnadu

img

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் - சௌகத் உஸ்மானி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பே, நாட்டில் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு மையங்களில் பல்வேறு தோழர்கள் செயல்பட்டுவந்திருக்கின்றனர். அவர்களில் தோழர் சௌகத் உஸ்மானியும் ஒருவராவார்.

சௌகத் உஸ்மானி பிறந்த தேதி தெரியவில்லை. எனினும் அவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் 1901இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது இயற்பெயர் மௌலா பக்ஷ் என்பதாகும். பின்னர் அவர் மௌலான சௌகத் அலி அவர்களின் தீவிர அபிமானியாக மாறியதால் தன் பெயரை சௌகத் உஸ்மானி என மாற்றிக்கொண்டார்.

சௌகத் உஸ்மானிக்கு, பத்து வயதாக  இருக்கும்பொழுது, அவரது பாட்டி 'கத்தார்' ('Ghaddar') எனப்படும் 1857 கலகம் உருவான சமயத்தில் நம் மக்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரமான அட்டூழியங்களைக் கதை, கதையாக விவரித்து, அவரிடம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, மிகவும் ஆழமானமுறையில் வெறுப்பை விதைத்திருந்தார்.  

ஆயினும் சௌகத் உஸ்மானியிடம் 1917இல்தான் ஒரு தெளிவான அரசியல் விழிப்புணர்வு என்பது உதயமானது. இதனை அவர்  மிகவும் விரிவானவகையில் சுமார் 552 பக்கங்களில் சுயசரிதையாக எழுதி இருக்கிறார்.  அது, அன்றைக்கிருந்த சோவியத் யூனியனிலும் (USSR) மற்றும் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசிலும் (GDR) கிழக்கத்தியப் பிரிவில் ஓர் ஆய்வுப் பொருளாக (research study) மாறி இருந்தது. இன்று அதன் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

1917இல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சி, அநேகமாக அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் காலனியாதிக்க நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த சமயத்தில், ரஷ்யாவில் தொழிலாளர்கள்-விவசாயிகளின் செம்படை பெற்றிட்ட அற்புதமான வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றிகள் சௌகத் உஸ்மானியிடம் மிகவும் எழுச்சியினையும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தியது. இதன் பாதிப்பின் காரணமாக சோவியத்யூனியனில் நடைபெற்றதைப்போல ஒரு செம்படைப் புரட்சியை இந்தியாவிலும் நடத்த வேண்டும் என்று சௌகத் உஸ்மானி விருப்பம் கொண்டார். இதே போன்ற கருத்து கொண்ட இளைஞர்கள் பலருடன் இந்தியாவிலிருந்து, சோவியத் யூனியனுக்கு நடந்தே சென்றுள்ளார்.

 1920 மே மாதத்தில் இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக வெளியேறி, சோவியத் நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார். இவர்,   இதர இந்திய இளைஞர்களுடன், (மொத்தத்தில் 36 பேர்) செஞ்சேனையின் ஓர் அங்கமாக மாறினார். 

பின்னர் செஞ்சேனையில் சேர்ந்தபின் சில எதிர்ப்புரட்சிக் குழுக்களுக்கு எதிராக நடைபெற்ற போர்களில் பங்குகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

சோவியத் யூனியனில் சௌகத் உஸ்மானி கற்ற கல்வி, அவருக்குள்ளே மார்க்சிய-லெனினியத்தின் உண்மையான போதனைகளைப் படிப்படியாகப் புகட்டி அவரைத் தெளிவு படுத்தியது. அதன்பின்னர், சோவியத் யூனியன் அவருக்கு உத்வேகமூட்டும் ஒரு நாடாக மாறியது. புகழ்மிக்க அந்நாட்டின்மீது அவருக்கிருந்த அளவிடற்கரிய அன்பு அவரை மூன்று முறை அந்நாட்டிற்குச் சென்றுவர அவரைக் கட்டாயப்படுத்தியது.

இந்த அனுபவங்கள் அனைத்தையும் அவர் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்தப் பயணங்கள், வெவ்வேறான மூன்று கால கட்டங்களில், வெவ்வேறான சூழ்நிலைகளில், மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு முறையும் அந்நாட்டிற்குச் சென்று அந்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்தபின் அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அபரிமிதமான அளவில் வளம் பெற்றன.

இதன்காரணமாகத்தான் 1923இல் கான்பூரில் நடைபெற்ற போல்ஷ்விக் சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக ஒவ்வொருநாளும் 15 மைல்கள் அவரை நடத்தியே கூட்டிச்சென்றபோதும்கூட அந்தத்துன்பங்கள் எல்லாம் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

ஒரு புரட்சியாளனின் வரலாற்றுச்சிறப்புமிக்க பயணங்கள் (சோவியத் யூனியனில் சிறிது காலம் தங்கியிருத்தல்) என்ற தலைப்பில் தோழர் சௌகத் உஸ்மானி தன் பயணங்கள் குறித்த அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கிறார். பாரதி புத்தகாலயம் அதனை விரைவில் வெளியிட இருக்கிறது. அதில் ஒவ்வொரு தடவையும் சோவியத் யூனியன் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு தோழரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவைகளாகும்.

முதல் பயணத்தை தோழர் சௌகத் உஸ்மானி பெஷாவரிலிருந்து மாஸ்கோவிற்கு மேற்கொண்டார். அப்போதுதான் தாஷ்கண்டு சென்றிருக்கிறார். மாஸ்கோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்திருக்கிறார். சோவியத்யூனியன் பின்பற்றிய புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அதிசயங்களைக் கண்டு வியந்திருக்கிறார்.

இரண்டாவது பயணம் கராச்சியிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்றதாகும். இந்த சமயத்தில்தான் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது பேராயத்தில் (காங்கிரசில்) பங்கேற்றார்.

'சோவியத் யூனியனில் எனது அனுபவங்கள் (1920-21)' என்ற சிறு நூல் வெளியிட்டிருக்கிறார்.  

மூன்றாவது பயணத்தை தில்லியிலிருந்து மாஸ்கோவிற்கு மேற்கொண்டிருக்கிறார்.

நேருவுடன் சந்திப்பு

1928-ஆம் ஆண்டு மே மாத தொடக்கத்தில், சௌகத் உஸ்மானி தில்லியில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு, அங்கு, பண்டித ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பலரை சந்திக்க விரும்பினார். சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் போது பல முறை அவரை சந்தித்திருந்தாலும், அவருடன் தனித்து பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அலகாபாத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் நேருவை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்பட்டது. 'ரஷ்யப் புரட்சியின் ஒரு பக்கம்' (A page from the Russian Revolution) என்ற எனது நூலின் கையெழுத்துப் படியை நேருவிடம் காண்பித்து, அதற்கு ஒரு அறிமுக உரை எழுதித்தரக் கோரியபோது, கனிவுடன் இணங்கிய நேரு, அவ்வாறே எழுதி, அதை அன்றைய மாலையிலேயே அவரது இல்லமான ஆனந்த பவனில் சௌகத் உஸ்மானியிடம் வழங்கினார். அந்த அருமையான அறிமுக உரையுடன் அந்த நூலின் கையெழுத்துப் பிரதி, நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த காவல்துறையின் கைகளில் சிக்காமல், மாஸ்கோவை பாதுகாப்பாக சென்றடைந்தது.

தோழர் சௌகத் உஸ்மானி, கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது பேராயம் மாஸ்கோவில் நடைபெற்றபோது இந்தியாவிலிருந்து சென்ற வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா (திருமதி சரோஜினி நாயுடுவின் சகோதரர்), புபேந்திரநாத் தத்தா (ஸ்வாமி விவேகானந்தரின் சகோதரர்), பி. கங்கோஜி, டாக்டர் தரக்னாத் தாஸ், டாக்டர் அப்துல் வகித், குலாம் அம்பியா கான் லுஹானி, நம்பியார், செண்பகராமன் பிள்ளை, தாஸ்குப்தாக்கள், திருமதி அக்னேஸ் ஸ்மெட்லி முதலான தோழர்களைச் சந்தித்திருக்கிறார்.

என்.என்.ராய், சௌகத் உஸ்மானிக்கு பேராயத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதிச்சீட்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.

தோழர் சௌகத் உஸ்மானி சென்னை வந்திருந்த சமயத்தில் உடல்நலிவுற்று, தோழர் சிங்காரவேலர் இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அதேபோன்று தோழர் பகத்சிங் மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட தோழர்களுடனும் சௌகத் உஸ்மானி நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார்.

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றமான ஹவுஸ் ஆப் காமன்ஸ் (House of Commons) அவைக்கு இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த முதல் எம்.பி. தாதாபாய் நௌரோஜியாவார். இவருக்கு அப்போது ஜின்னா வெற்றிகரமான முறையில் பிரச்சாரம் செய்து அவரை வெற்றி பெறவைத்தார். அதேபோன்று மற்றொருவரும் ஹவுஸ் ஆப் காமன்ஸ் அவைக்கு இந்தியாவிலிருந்து போட்டி போட்டார். அவர் வேறு யாருமல்ல, சௌகத் உஸ்மானிதான் அவர்.  

1929இல் மீரட் சதி வழக்கிற்காக சௌகத் உஸ்மானி கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்த இவரை, கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தி வைத்தது. இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்துவந்த அக்கிரமங்களை ஆங்கில மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி இவரை நிற்க வைத்தது. இவர் எதிர்த்துப்  போட்டியிட்ட வேட்பாளர் வேறு யாருமில்லை. சர் ஜான் சைமன் என்பவர்தான். (இந்தப் பேர்வழிதான் பின்னர் 1930இல் இந்தியாவிற்கு வந்தார். அவர் தலைமையில் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது.) எனினும் சௌகத் உஸ்மானி தோல்வி யடைந்தார். பின்னர் 1931இல் ஹவுஸ் ஆக் காமன்ஸ்-க்கு தேர்தல் நடைபெற்றபோதும் சௌகத் உஸ்மானி கிரேட் பிரிட்டன் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். லண்டனிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் ஒன்று திரண்டு சௌகத் உஸ்மானிக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போதும் சௌகத் உஸ்மானி சிறையில்தான் இருந்தார்.

எம்.என்.ராயின் கட்டளைகளுக்கிணங்க சௌகத் உஸ்மானி கான்பூரிலும், பெனாரஸிலும் இயக்க வேலைகளைச் செய்து வந்தார்.

பின்னர் 1978இல் இறந்துள்ளார். அவர் இறந்தது எவர் பார்வைக்கும் வராமலேயே போய்விட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாவதற்க முன்பே, தோழர் சௌகத் உஸ்மானி போன்று 1917க்குப்பின் எண்ணற்ற தோழர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தங்கள் உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் அளித்துள்ளனர். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும், அனுபவங்களையும் தேடித் தேடிப் படித்திடுவோம். இவை நம் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்திடும் என்பது திண்ணம்.