பாவணர் 1966ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆங்கில நூல் தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்ற கருத்தமைந்த (The primary classical language of the world) என்ற நூலாகும். இந்நூலை தமிழ் மொழியின் செம்மொழித் தகுதியை வரலாற்று மொழியியல் அடிப்படையில் விளக்கும் ஒரு முழுமையான முதல் நூலாகும். தமிழின் செம்மொழித் தகுதிகளை பாவாணர் அந்நூலில் விளக்கியுள்ளார். அவை
1. தமிழ் குமரிக் கண்டத்தில் தோன்றிய முதற்றாய் மொழி.
2. தமிழ் எளிய ஒலிப்பு முறையைக் கொண்டது.
3. தமிழ் உலகாளவிய உணர்வுப் பெருமிதம் கொண்டது.
4. ஆரிய மொழிகளுக்கு இடையே தமிழ் தனித்து வழங்கும் பெருமை உடையது.
5. தமிழ்ச் சொற்கள் அமைப்பில் ஒலிச்சுருக்கமும் தொன்மையும் உடையன.
6. அம்மா, அப்பா ஆகிய தமிழ்ச்சொற்கள் அதே வடிவங்களிலோ அல்லது திரிந்த வடிவங்களிலோ ஏறக்குறைய உலகமொழிகள் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளன.
7. தமிழில் எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை.
8. தமிழிலுள்ள எல்லா ஒட்டுச் சொற்களும் பிரிக்கத் தகுந்தவையாகவும் பொருட்குறிப் புள்ளவையாகவும் உள்ளன.
9. தமிழில் சமற்கிருதம் போலச் சொற்களுக்குப்பால் வேறுபாடு இல்லை.
10. தமிழில் ஒழுங்குமுறையற்ற சொற்கள் இல்லை.
11. தமிழ்ச் சொற்கள் பொருளுடன் காரண காரியத் தொடர்புடையனவாக உள்ளன.
12. தமிழ்ச் சொற்கள் இயற்கையானதாக உள்ளன.
13. ஒருமை, பன்மை எண்களே தவிர சமற்கிருதத்தில் போல இருமை என்ற எண் இல்லை.
14. தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றி இயற்கையாகவே வளர்ச்சி பெற்று வந்த ஒரு மொழியாகும்.
15. தமிழில் மிகவும் உயர்ந்த செம்மொழிப் பண்புகள் ஆற்றொழுக்காகத் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றன.
இவை முனைவர் சி.சேதுராமன் தம் தமிழ் இலக்கிய வரலாற்றில் எடுத்துக் காட்டியவை.
இவற்றைச் சுருக்கமாக தொன்மை, உலகளாவிய உணர்வுப் பெருமிதம் சொல்லமைப்பின் தொன்மை, பிறமொழிக்குக் கொடை, ஒழுங்கான சொல்லமைப்பு, உயர்ந்த இலக்கியத்தரம் காரணகாரியத் தொடர்புடைய சொல்லமைப்பு, தனித்தன்மை, சொல்வளம் ஆகியவற்றைச் செம்மொழிக்கான தகுதிகளாக, பாவாணர் வழியில் வரையறுத்துக் கொள்ளலாம். பாவாணர் தமிழின் தொன்மைக்குக் குமரிக்கண்டம் குறித்த பல்வேறு இலக்கிய வரலாற்றுச் சான்றுகளைத் தம் எல்லா நூல்களிலும் எடுத்துக் காட்டுவதனை வழக்கமாகக் கொண்டவர். எனினும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் கால்டுவெல் தமிழின் தொன்மைகுறித்துக் கூறும் சான்றுகளை அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை.“திராவிட மொழிக் குடும்பத்தை, இந்தோ- ஐரோப்பியத் தொகுதியையும், சித்தியத் தொகுதியையும் இணைக்கும் அண்டாக (வளையமாக, மட்டுமின்றிச் சில கூறுகளில் சிறப்பாக மூவிடச் சுட்டுப் பெயர்கள் தொடர்பாக, மாந்தன் மொழிவரலாற்றில், இந்தோ - ஐரோப்பிய நிலைக்குமுந்தியதும், சித்திய நிலைக்கு முந்தியதும், அவ்விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதற்கு முந்தியதுமான, ஒருகால நிலையைக் காட்டி எஞ்சி நிற்கும் தலைசிறந்த படிநிகரியாகவும்(Representative) கருத ஏது இருப்பதாகத் தோன்றவில்லையா?
கால்டுவெல் மாந்தன் மொழி வரலாற்றில் மூவிடச் சுட்டுப் பெயர்கள் தமிழ் உலகிற்கு வழங்கிய கொடை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதுடன், தமிழ் முதன்மொழி ஆகத்தக்க தொன் மையுடையது என்பதை மறைமுகமாகவும் சுட்டிக்காட்டுகிறார். இந்த மேற்கோளையே பாவாணர் தமிழின் தொன்மைக்குச் சான்றாகக் காட்டுகிறார்.
உலகளாவிய உணர்வுப் பெருமிதம்
1. பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் குமரி நாட்டுத் தமிழ்ச் சொற்கள் ஆரியம் உட்பட உலகப்பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.
2. தமிழ்ச் சொல்லே இல்லாத உலகப் பெருமொழி ஒன்றுமே இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
3. தமிழ் மொழியில் உள்ள அளவு தொழில் பெயர் ஈற்றுவளம் வேறு எம்மொழியிலும் இல்லை.
4. தமிழில் முதல், ஈறு, இடைநிலை என்றுஎழுத்துக்கள் இடம் பெறும் இடங்கள் குறித்தவரையறை தமிழுக்குச் சிறப்பாக உரியதாகும். பிறமொழிகளில் எந்த எழுத்தும் எந்த இடத்திலும் வரலாம்.
5. மூன்றுதனிமெய்களும் நான்கு தனிமெய் களும் தமிழில் வரவே வாரா.
சொல்லமைப்பின் தொன்மை
வரலாற்று மொழியியலின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களின் வேர்களின் அடிப்படையில் எவ்வாறு பன்னாட்டுச் சொற்கள் அமைந்துள்ளன என எடுத்துக்காட்டித் தமிழின் சொல்லமைப்பின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறார் பாவாணர்.
தனித்தன்மை
தமிழ் பெரும்பாலும் மெல்லோசைச் சொற்களைக் கொண்டது. அதனால்தான் அது உலகமுதன் மொழியாய்த் தோன்றியும் இறந்து போகாமல் இன்னும் இளமை நிலையில் இருந்து வருகின்றது. அதைத் தாய்மொழியாகக் கொண்டவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாகப் பேசிவருகின்றனர். பா.வே.மாணிக்க நாயகர் ஒருமுறை உலகப் பெருமொழிகளுள் ஒவ்வொன்றிலும் அவ்வாயிரம் சொற்களை எடுத்து அவற்றிற்குச் செலவிடும் மூச்சை மூச்சுமானி கொண்டு அளந்து பார்த்ததில், சமஸ்கிருதத்திற்கே மிகுந்தும் தமிழுக்கு மிகக் குறைந்தும் இருப்பதைக் கண்டார்.தமிழ் மொழியில் போல காதல், வாழ்த்து ஆகியன பற்றிப் பாடுவதற்குச் சிறந்த கலிப்பா போன்றசெய்யுள் வகை வேறு எம்மொழியிலும் காண முடியாது. பொருளணியில் உள்ளுறை உவமம் தமிழுக்குச் சிறப்பாக உரியது. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூலும் திருக்குறள் போன்றஅறநூலும் வேறு எம்மொழியிலும் இல்லை.உலகமொழிகளில் தூய்மையை வேண்டுவதும் அதைக்காத்துக் கொள்ள வல்லதும் தமிழ்ஒன்றே. மேல்நாட்டிசைக்கு அராகம் (ஆளத்தி) தாளம், சுரம் பாடல் என்ற மூன்றும் இல்லை. மெட்டுக்கள் தாம் உண்டு. இவ்வாறு பாவாணர் தமிழின் தனித்தன்மையை தம் நூலில் விளக்கியுள்ளார்.
சொல்வளம்
தமிழின் சொல்வளம் குறித்து பாவாணர் தம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலில் விரிவாகவிளக்கியுள்ளார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழின் சொல்வளம் குறித்து அவர் விளக்கத்தவறுவதில்லை. செந்தமிழ்ச் சிறப்பு என்ற நூலிலும் தமிழின் சொல்வளம் குறித்து விளக்கியுள்ளார். குமரிநாட்டுத் தமிழ்ப் பொதுமக்கள் இலைகளை நால்வகையாக வகுத்து, வேம்பும் வாழையும் போல மெல்லிதாயிருப்பதை இலை என்றும்நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை) ஒட்டி நீண்டு சுரசுரப்பாக இருப்பதைத் தாள்என்றும் சோளமும் கரும்பும் போலப் பெருந் தாளாக நீண்டு தொங்குவதைத் தோகை என்றும், தென்னையும் பனையும் போலத் திண்ணமாய் இருப்பதை ஓலை என்றும் வழங்கினர்.
பூ நிலைகளை ஐவகையாகக் கொண்டு தோன்றிய நிலையில் அரும்பு என்றும், மலரத் தொடங்கிய நிலையில் போது என்றும், மலர்ந்தநிலையில் மலர் என்றும், உதிர்ந்து விழுந்த நிலையில் வீ என்றும் வாடிச்சிவந்த நிலையில் செம்மல்என்றும் சொல்லினர்.
காய் நிலைகளை நால்வகையாகக் கண்டுதோன்றிய நிலையில் பிஞ்சு என்றும், சற்றுப் பருத்த நிலையில் காய் என்றும், பழுத்த நிலையில் பழம் (மஞ்சள் நிறமானது) அல்லது கனி (கனிவாயிருப்பது) என்றும் பெயரிட்டனர். இனி பிஞ்சு நிலையிலும் வாழைக்குக் கச்சல் என்றும், மாவிற்கு வடு என்றும் பலாவிற்கு மூசுஎன்றும் தென்னை பனைக்குக் குரும்பை என்றும்சிறப்புப் பெயர் குறித்தனர்.ஆங்கிலம் லட்சக்கணக்கான சொற்களைக்கொண்டிருந்தும், ஏறத்தாழ எல்லாமொழிகளிலும் கடன் பெற்றும், காயைப் பழுக்காத பழம் என்று குறிப்பதும், வெயிலையும் நிலவையும் குறிக்கத் தனிச்சொல் இல்லாதிருப்பதும் கவனிக்கத்தக்கது.தமிழை உலகமுதல் உயர்தனிச் செம்மொழி எனப் போற்றும் பாவாணர் அதற்கான தமிழின் செம்மொழித் தகுதிகளை விரிவாகப் பல்வேறு நூல்களில் விளக்கியுள்ளார். வரலாற்று மொழியியலின் அடிப்படையில் அமைந்த பாவாணர் ஆய்வு அண்மையில் ஆங்கில மொழியியல் அறிஞர் லெவிட் அவர்களால் போற்றப்பட்டும் உள்ளது. தமிழ் செம்மொழி ஆனதோடு நிறைவடையாது அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆய்வு வல்லமை பாவாணருக்கு உண்டு என்பதை அவரது நூர்களைக் கற்றவர்களால் உண்மையாய் உணர முடியும். பாவாணரைத் திறனாய்வோர் அவர் நூல்களைக் கற்றதற்குப் பிறகு திறனாய்வு செய்வதே அறிவு நேர்மையாகும். அத்தகைய திறனாய்வை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
=== பேராசிரியர் க.முத்துச்சாமி===