tamilnadu

img

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.யான இந்தியர்- ப.முருகன்

இங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று செயல்பட்ட இந்தியர் சக்லத்வாலா. அவரது முழுப்பெயர் சாபூர்ஜி தொராப்ஜி சக்லத்வாலா. இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த மூன்று பேர்களில் ஒருவர். இவருக்கு முன்னதாக தாதாபாய் நௌரோஜியும் அவரை அடுத்து மஞ்சேர்ஜி போவநாக்ரீ.  இவர்கள் மூவருமே பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் அபூர்வ ஒற்றுமை.  சக்லத்வாலா இந்தியாவின் பிரபலமான தொழில் அதிபர் குடும்பமான டாடா குழுமத்தைச் சேர்ந்தவராவார். இவர் டாடா குழுமத் தலைவர் ஜாம்ஜெட்ஜி நௌரோஜி டாடாவின் மருமகன் ஆவார். டாடாவின் உருக்கு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சக்லத்வாலா அன்றைய தேசிய அரசியலால் கவரப்பட்டு அதில் தீவிரம் காட்டியதால் அவர் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  சக்லத்வாலா மும்பையில் 1874 மார்ச் 28 அன்று பிறந்தார். செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். அவர் மும்பையின் குடிசைப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டினார். அத்துடன் தேசிய இயக்கத்திலும் ஈடுபட்டார். இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று கருதியே - நாடு கடத்துவது போல- அவர் மான்செஸ்டரில் உள்ள டாடா அலுவலகத்திற்கு 1905 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு மேட்லாக் நகரில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குணமானார். அங்கு சிகிச்சை பெற்ற காலத்தில் பணிப்பெண்ணாக இருந்த சாரா மார்ஸ் என்பவரை 1907ஆம் ஆண்டு மணந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து லண்டன் சென்று 1909ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அங்கு இந்திய தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்சனைகளுக்காக பேசலானார். அங்கு இண்டியன் ஹோம்ரூல் லீக் அமைப்பின் உறுப்பினரானார். 1917ஆம் ஆண்டு தொழிலாளர் நல லீக் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரானார். இந்த அமைப்பு லண்டனில் இந்திய கப்பல் பணியாளர்களின் தொழில் நிலைமை பற்றி கவனித்தது. பின்னர் மற்ற பகுதிகளிலும் உள்ள அனைத்து இந்திய தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்காக தனது பணியை விரிவுபடுத்தியது.  இந்த நிலையில் 1920 மற்றும் 30களில் சக்லத்வாலாவின் பெயர் இங்கிலாந்து முழுவதும் இருந்த இந்திய மாணவர்கள் மத்தியிலே பிரபலமானது. இந்நிலையில் 1921ஆம் ஆண்டு பாட்டர்சி வடக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அதே ஆண்டில் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார்.  1922 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். ஆயினும் 1923 டிசம்பரில் நடந்த தேர்தலில் தோல்வியுற்றார். எனினும் 1924 அக்டோபரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து 1929ஆம் ஆண்டுவரை அந்தத் தொகுதியின் உறுப்பினராக செயல்பட்டார். சக்லத்வாலா நாடாளுமன்றத்தில் இந்திய பிரச்சனைகள் தொடர்பாக முழங்கினார். இந்திய மக்களின் விடுதலைக்காக, இந்தியாவின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார். இந்தக் காலத்தில்தான் இந்தியாவில் 1925 டிசம்பர் 25ல் நடக்கவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக சக்லத்வாலாவுக்கு சத்யபக்தாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும் அவருக்கு இந்தியா வருவதற்கான பயணத்தொகையை சத்யபக்தா அனுப்பி வைக்க முடியாததால் அவர் வர இயலவில்லை. அதை அடுத்தே சிங்காரவேலர் மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே.  இந்த மாநாட்டிற்கு அவர் வர இயலாமல் போனாலும் 1927ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். ஜனவரி 14ஆம் நாள் கப்பல் மூலம் மும்பை வந்து சேர்ந்த அவருக்கு பம்பாய் மாகாண காங்கிரஸ் குழு வரவேற்று தேநீர் விருந்தளித்தது. பம்பாய்க்கு வந்திருந்த சக்லத்வாலாவை தமிழகத்திற்கு வருமாறு சிங்காரவேலர் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார். அந்தத் தந்தியில் இந்தியத் தொழிலாளர்களின் விடுதலை என்ற புகழ்பெற்ற கொள்கையை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் அனைத்து நாடுகளின் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் லாகூரில் நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாட்டிற்கு தலைமை தாங்க வேண்டுமென்றும் அந்தத் தந்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். சக்லத்வாலா இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு பிப்ரவரி 24 அன்று சென்னைக்கு வருகை புரிந்தார். சிங்காரவேலரின் தலைமையில் தொழிற்சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்புக்குழு அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது.  சென்னையில் சக்லத்வாலா இரண்டு இடங்களில் உரையாற்றினார். சூளை எட்வர்டு பூங்காவில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டத்திலும், பெரம்பூரில் ரயில்வே தொழிலாளர்கள் கூட்டத்திலும் பேசினார். பின்னர் திருவல்லிக்கேணி கடற்கரையில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் கோகலே ஹாலில் படித்தவர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் லட்சியங்கள் பற்றியும் பேசினார். இந்த கூட்டங்களில் பங்கேற்று பேசிய பின்னர் சென்னை அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கை அவரது வருகை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது. அதில் “சக்லத்வாலா சென்னை பாட்டாளி வர்க்கம் என ஒன்றை கண்டுபிடித்தார் என்பது மட்டுமல்ல, அதன் உறுப்பினர்களை தொழிற்சங்கங்களில் சேர்த்து விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி போன்ற ஒரு அமைப்பையும் இளம் தோழர்கள் சங்கம் என்ற ஒன்றையும் உருவாக்கத் தூண்டினார்” என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிகழ்த்திய உரைகளையும், அவரது நடவடிக்கைகளையும் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அவர் இங்கிலாந்துக்கு திரும்பிய பின்னர் மீண்டும் இந்தியா செல்வதற்கு தடைவிதித்துவிட்டது. இதற்கு அவரது கம்யூனிஸ்ட்டுகளுடனான தொடர்பை காரணமாகக் கூறியது.  சக்லத்வாலா இந்தியாவில் தொழிலாளர்களுடன் உறவு கொண்டிருந்தார் என்பதால், இங்கிருந்து இங்கிலாந்திற்கு அவரது குடும்பத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதும், அவர் கம்யூனிஸ்ட்டுகளோடு தொடர்பு கொண்டிருப்பதால் இந்தியா செல்வதற்கு இங்கிலாந்து அரசால் தடை விதிக்கப்பட்டதும் ஒரே கண்ணோட்டத்தில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.