ஆம்பூர், ஜூலை 13- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியருகே தீக்குளித்த முகிலன் (27) என்ற வாலிபருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது இவரை காவல் துறையினர் மடக்கி வழக்கு பதிவு செய்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனத்தை திருப்பித் தர காவல்துறையினர் மறுத்துவிட்டதால் வீட்டிற்கு சென்று மண்ணெண்ணை எடுத்து வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ் தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில், வாகனம் பறிக்கப்பட்டதற்காக முகிலன் தீக்குளித்தார் என காவல்துறை கூறுவது நம்பும்படி இல்லை. அவர் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ காயப்படுத்தப்படாமல் இச்சம்பவம் நடந்திருக்காது. எனவே சம்பந்தப்பட்ட காவலர்களை இடமாற்றம் செய்வது மட்டும் தீர்வாகாது. துறைரீதியான விசாரணையும், நடவடிக்கையும் தேவை. மேலும் பாதிக்கப்பட்ட முகிலன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும். ஏற்கனவே திருப்பத்தூர் தாலுகா கிழானூர் மலை கிராமத்தை சேர்ந்த மலைவாசி லோகநாதன் என்பவர் கடந்த 3ஆம் தேதி வனத்துறையினரால் தாக்கப்பட்டார். அவர் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் எஸ்.ஐ. மஞ்சுநாதன் பல மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளார். மேலும் எஸ்.ஐ. மஞ்சுநாதன் வனத்துறையினரோடு பேசிவிட்டு புகார் அளிக்க வந்தவரையே பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டுகிறார். இது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இத்தகைய சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.