தஞ்சாவூர்,ஏப்.22- பொதுமக்கள் சிரமங்களை குறைக்கும் வகையில் நடமாடும் மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்தும் போது, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கிட கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோருகிறோம். வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லலாம் என்பது நடைமுறையில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ள குடும்பம் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்குள்தான் செல்ல வேண்டும் என்பதும் நடைமுறையில் சாத்தியமற்றதாகும். வார நாட்கள் முழுவதும் வீட்டிற்கு ஒருவர் அத்தியாவசியத் தேவைக்கு சென்று வருபவர்களை அனுமதிக்க வேண்டும்.
சமூக விலகல் சரியாக கடைப்பிடி க்கப்படவே, காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க கடைகள் மதியம் ஒரு மணி வரை நீடிப்பதே ஏதுவாக இருக்கும். ரேசன் பொருள், முகக்கவசம், காய்கறிகள் தொகுப்பு என நிர்வாகமே வீடுகளுக்கு சமூக ஆர்வலர்கள், நிர்வாகப் பணியாளர்கள் இவர்களை பயன்படுத்தி நேரடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.
உரம் கிடைக்க ஏற்பாடு செய்க!
100 நாள் வேலையை சமூக விலகலுக்கு உட்பட்டு உடனடியாக துவங்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கான சம்பளத்தை வீட்டிற்கு நேரடியாக சென்று கொடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தற்போது கோடை மற்றும் குறுவை சாகுபடி வேலைகள் நடைபெறுகின்றன. அதற்கான உரம் தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள், காய்கறிகள் தட்டுப்பாடு உள்ளது. இப்பகுதிகளுக்கு மளிகை, காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடமாடும் விற்பனை வண்டிகளை அனுப்பிட வேண்டும். கிராமங்களில் உள்ள மக்கள் உரிய மருத்துவ சுகாதார வசதிகளைப் பெறுவதற்கு நடமாடும் மருத்துவ வாகனங்களை ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.