tamilnadu

img

வாலிபர் உடல்நிலை முன்னேற்றம்

திருநெல்வேலி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் குணமடைவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தென் மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டும், சந்தேகப்படும் நோயாளிகளுக்கு தனி வார்டும், பரிசோதனைக்கு தனி வார்டும் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை சளி, காய்ச்சல், இருமலுக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள். தினசரி 20-க்கும் மேற்பட்டவர்கள் சளி, காய்ச்சல், இருமலுடன் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்த துபாயில் இருந்து திரும்பிய வாலிபருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கவச உடை அணிந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் குணமடைவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெற்ற 12 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தற்போது கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 407 பேர் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடு அனைத்திற்கும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.