மதுரை, மார்ச் 16- உழைக்கும் மக்களின் உன்னத உலகைப் படைக்கும் மாபெரும் பயணத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் உயிர்ப்புள்ள படைப்புகளை வழங்கும் செம்மலர் ஏட்டிற்கு தமிழகம் முழுவதும் ஆயிரமாயிரமாய் சந்தாக்களை சேர்ப்பீர் என்று, செம்மலர் பொன்விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய தீக்கதிர் - செம்மலர் முதன்மைப் பொது மேலாளர் க.கனகராஜ் வேண்டுகோள் விடுத்தார். மதுரையில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற செம்மலர் பொன்விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தமுஎகச தலைவர்களிடமிருந்து சந்தா தொகைகளை பெற்றுக்கொண்டு உரையாற்றிய அவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்ததை நினைவு கூர்ந்தார். தான் செம்மலரில் எழுதிய கதைக்கு “ஆறுதல் பரிசு” கிடைத்தது என்பதையும் நினைவு கூர்ந்த அவர், “நான் பணியாற்றிய ஸ்பிக் நிறுவனத்திற்கு செம்மலர் அட்டையில்லாமல் வரும்; அதை படித்து இலக்கிய வாசனையை நுகர்ந்துள்ளேன். பல கதைகளோடு ஒன்றிப்போயிருக்கிறேன்” என்றார்.
“தூத்துக்குடியில் சுமைப்பணி தொழிலாளி ஒருவர் தான் செம்மலர் இதழை விநியோகம்செய்தார். அவருக்கு வாசிக்கத் தெரியாது. ஆனால், செம்மலரைப் பற்றிய அத்துணை தகவல்களையும் கூறுவார். வாசிக்கத் தெரியாத தாங்கள் ஏன் சந்தாதாரராக சேர்ந்துள்ளீர்கள் எனக்கேட்டதற்கு, செம்மலர் போன்ற இலக்கிய இதழ்கள் உயிர்ப்போடு இருக்க வேண்டியது அவசியம் அதற்காக நானும் சந்தா செலுத்தியுள்ளேன் என்று அந்தத் தொழிலாளி உணர்ச்சிப்பெருக்குடன் கூறினார். அப்போது எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது” என்று குறிப்பிட்ட க.கனகராஜ், இன்றைக்கு படைப்புலம் உயிர்ப்போடு இருக்கிறதா என்ற கேள்வியெழுந்துள்ள நிலையில், அன்று தொடங்கி இன்று வரை செம்மலர் உயிர்த்துடிப் போடு உள்ளது. செம்மலரின் முதல் இதழ் தொடங்கி இந்த மாத இதழ்வரை செழுமையாக வருவ தற்கு தி.வரதராசன் போன்ற மூத்த தோழர்கள் தான் கார ணம். உயிர்ப்புள்ள படைப்புகளை வழங்கும் செம்மலர் விற்பனை பல்லாயிரமாகக் கூட வேண்டும். தமிழகம் முழு வதும் செம்மலர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வரு கிறது. பல்லாயிரக்கணக்கில் சந்தாக்களை சேர்க்கு மாறு இடதுசாரி இயக்கத்தின் ஊழியர்கள், எழுத்தா ளர்கள், கலைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
கே.பாலபாரதி
விழாவில் உரையாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், செம்மலர் துணை ஆசிரியருமான கே.பாலபாரதி, தான் ஒரு சத்துணவு ஊழியராக பணியாற்றிய காலத்தில் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் உற்ற தோழியாக துணை நின்றது செம்மலர் ஏடு என்றும் பெண்ணியம் குறித்தும் பெண்களின் துயரங்கள் குறித்தும் அதற்கு எதிராக அவர்கள் முனைப்புடன் நடத்துகிற போராட்டங்கள் குறித்தும் தனக்கே உரித்தான பாணியில் ஏராளமான கதைகள், படைப்புகளை செம்மலர் ஏடு அளித்துக் கொண்டிருக்கிறது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.