tamilnadu

img

உயர் மின் கோபுர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

போராடும் விவசாயிகளுடன் பேசுக!

பெ.சண்முகம் வலியுறுத்தல்

திருவண்ணாமலை,நவ. 18- உயர்மின் கோபுரம் அமைக்க வலுக் கட்டாயமாக நிலங்களை பறிக்கும் தமிழக அரசை கண்டித்து திங்களன்று ஆவேசமிகு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்தனர். மத்திய அரசின் பவர்கிரிட் நிறு வனமும், தமிழக அரசின் மின் தொடர மைப்புக் கழகமும் இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,  கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப் புரம், தேனி மற்றும் திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வலியுறுத்தியும், போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் திங்களன்று (நவ.18)  கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டங்கள்  நடைபெற்றன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, எம்.பிரகலநாதன், டி.கே.வெங்கடேசன், பலராமன் கே.கே.வெங்கடேசன், காமராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எஸ்.ராம தாஸ், எம்.வீரபத்திரன், பாரி, சிவ ராமன் எ.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தின் போது பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் திங்களன்று 11 மாவட்டங்களில் 24 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டங்களில்  பங்கேற்றனர். தமிழக முதல்வர், தானும் ஒரு விவ சாயி என்று கூறிவருகிறார். ஆனால், விவசாயிகளுக்கு  விரோதமான நட வடிக்கைகளே தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று சாடினார்.

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் திட்டத்தில், விவசாய நிலங்களுக்கு  வாடகை வழங்க வேண்டும் என, மின்சாரச் சட்டம் 2003 கூறியுள்ளபோதும், மாநில அரசு அந்த சட்டத்தை அமல்படுத்த மறுக்கிறது. எனவே,  விவசாயிகளுக்கு வாடகை வழங்க வேண்டும். இனிமேல் மின்சா ரம் எடுத்துச் செல்லும் திட்டங் களை, கேபிள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும்.மின் கோபுரம் அமைப்பதால் விவசாய நிலங் களின் மதிப்பு குறைகிறது. மேலும், மின்தூண்டல் காரணமாக ஆடு, மாடுகள், மனிதர்களுக்கு கருவுறுதல் பாதிக்கப்படுகிறது. 

தற்போது, நவீன முறையில் கேபிள் வழியாக, 1100 கிலோவாட் வரை  எடுத்துச் செல்லமுடியும் என்ற நிலை யில், மின்கோபுரம் அமைப்பது  அவ சியமில்லை. ஏற்கனவே, அமைக்கப் பட்டுள்ள கோபுரங்களுக்கு பலருக்கு இழப்பீடு வழங்காமல், சிலருக்கு மட்டும் குறைவான இழப்பீடு வழங் கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷ யத்தில்  வெளிப்படைத் தன்மையோடு அரசு நடந்து கொள்ள வேண்டும்.  மின் கோபுரத்திற்கு எதிராக நடை பெற்றுள்ள  போராட்டங்களில் ஈடுபட்ட, ஏராளமான விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதை வாபஸ் பெறவேண்டும். 

ஏற்கனவே மின்துறை அமைச் சர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு ஏற்படாத நிலையில், தற்போது உடனடியாக, விவசாயிகளுடன் தமி ழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விவ சாயிகளுக்கு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பெ. சண்முகம் வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் பல்ல டம், கணியூர், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள்,சிபிஎம் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகி னர்.

கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை, கருமத்தம் பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் ஆவேசமிகு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத் தில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.சி.மனோகரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, சென்னிமலை, மொடக் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் டி.ரவீந்திரன், ஏ.எம்.முனுசாமி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வி.பி.குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கைதாகினர்.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, சங்ககிரி, மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. இதில் விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அ.விஜயமுருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆவேச முழக்கங்க ளை எழுப்பினர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரம் மற்றும் பென்னா கரம் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், படைவீடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் செ.நல்லாக் கவுண்டர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.