அகமதாபாத்:
பணமதிப்பு நீக்கத்தின் போது, பல நூறுகோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணத்தை, ஆளும் பாஜக-வினர், 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொண்டு, மாற்றிக் கொடுத்ததாக காங்கிரஸ் அதிரடி கிளப்பியிருந்தது.
இதுதொடர்பான வீடியோக்களையும் அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் தில்லியில் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் புதிதாக ஒரு வீடியோவை பத்திரிக்கையாளர்கள் முன்பு கபில் சிபல் வெளியிட்டார். தாடி வைத்த நபர் ஒருவர் ரூ. 5 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ரூ. 3 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இதனை செய்தியாளர்களுக்கும் காண்பித்த கபில் சிபல், பின்னர் பேட்டியளித்தார்.
அப்போது “வீடியோவில் உள்ள நபர் பாஜக-வுக்கு நெருக்கமானவராக இருப்பது போல் தெரிகிறது; அவர் பாஜக உறுப்பினராகவும் இருக்கலாம்” என்று கூறிய கபில் சிபல், “வீடியோவில் பணம் மாற்றும் நபர் பற்றி யாராவது அடையாளம் கூறினால், அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.