மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் (8-வது சீசன்) பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரமான லயானில் நடைபெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் காலிறுதியில் சொதப்ப அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. புதனன்று நடைபெற்ற முதலாவது அரை யிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அமெரிக்க வீராங்கனைகளை விடச் சிறப்பாக விளையாடினாலும் கோல் அடிக்கும் வாய்ப்புகளில் சொதப்பினர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் இங்கிலாந்து அணி வீணடித்ததே தோல்விக்குக் காரணமாகும்.