ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் அடுத்தாண்டு (2020) ஏப்ரல் - மே மாதங்களின் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் வியாழனன்று நடைபெற்றது. குடியுரிமை போராட்டத்தால் சுவாரஸ்யமின்றி தொடங்கிய இந்த ஏல நிகழ்ச்சியில் 29 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 62 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதற்காக 8 அணிகளும் ரூ.140 கோடியே 30 லட்சம் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை 15.5 கோடிக்குக் கொல்கத்தா அணி வாங்கியது. இந்த ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியும் தமிழ்நாட்டின் தாயக அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை மட்டுமே ஏலம் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா ரூ. 6.75 கோடிக்கு வாங்கப்பட்டார். அதற்கு அடுத்து இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரானை ரூ.5.5 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட் ரூ.2 கோடிக்கும், இந்திய அணியின் இளம் வீரர் சாய் கிஷோரை ரூ.20 லட்சத்திற்கும் ஏலம் எடுத்தது.
பயோ - டேட்டா
பியூஸ் சாவ்லா : வலதுகை சுழற்பந்துவீச்சாளரான இவருக்கு பேட்டிங் அனுபவமும் உண்டு. இவரது பந்துவீச்சு தாறுமாறாகத் திசை திரும்பும் என்பதால் எதிரணிக்கு சிக்கல் ஏற்படும். இந்திய ஆடுகளங்களில் பழுத்த அனுபவம் பெற்றுள்ளதால் சென்னை அணிக்கு பல்வேறு வகையில் உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம் குர்ரான் : இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் பேட்டிங்கில் நல்ல அனுபவம் பெற்ற ஆல்ரவுண்டர். இளம் வீரர் என்பதால் பீல்டிங்கிலும் கம்பீரமாக இருப்பார். சொல்லப்போனால் மைதானத்தில் துறுதுறுவென சுழலுவார்.
ஜோஷ் ஹாசில்வுட் : வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் ஸ்விங் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றவர். அதாவது எந்தவகை ஆடுகளமாக இருந்தாலும் தனது ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியை நடுங்க வைப்பார். பேட்டிங் அனுபவம் அவ்வளவாக கிடையாது.
சாய் கிஷோர் : தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இவருக்கு ஐபிஎல் தொடரில் அனுபவம் இல்லையென்றாலும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அனுபவம் உண்டு. பேட்டிங் செய்யும் திறமையும் இருப்பதால் ஆல்ரவுண்டர் பாணியில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 - முழு வீரர்கள் பட்டியல்
தோனி, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ், கரண் சர்மா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், முரளி விஜய், அம்பதி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், பாப் டு பிளெசிஸ், ஷர்துல் தாக்குர், டிவைன் பிராவோ, லுங்கி இங்கிடி, நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கே.எம். ஆசிப், ஜோஷ் ஹாசில்வுட், சாம் குர்ரான், மோனு குமார், சாய் கிஷோர்.
தமிழக வீரர்களின் நிலை
13-வது சீசன் ஐபிஎல் ஏலத்திற்கு தமிழ்நாடு சார்பில் மொத்தம் 10 வீரர்கள் பங்குபெற்றனர். இவர்களில் 3 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
சக்கரவர்த்தி - கொல்கத்தா - ரூ. 4 கோடி
சாய் கிஷோர் - சென்னை - ரூ. 20 லட்சம்
எம்.சித்தார்த் - கொல்கத்தா - ரூ. 20 லட்சம்
2020 சீசனில் விளையாடவுள்ள தமிழக வீரர்கள்
சாய் கிஷோர் - சென்னை
முரளி விஜய் - சென்னை
ஜெகதீசன் - சென்னை
அஸ்வின் - தில்லி
தி. கார்த்திக் - கொல்கத்தா
விஜய் சங்கர் - ஹைதராபாத்
வா. சுந்தர் - பெங்களூரு
நடராஜன் - ஹைதராபாத்
முருகன் அஸ்வின் - பஞ்சாப்
சக்கரவர்த்தி - கொல்கத்தா
எம்.சித்தார்த் - கொல்கத்தா