tamilnadu

பணி நிரந்தரம் கோரி துப்புரவு தொழிலாளர்கள் மனு

ஈரோடு, மே 4- ஈரோட்டில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என சிஐடியு சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 2500 தெருக்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தொகைக்கேற்ப துப்புரவு தொழிலாளர்கள் இல்லை. இந்நிலையில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையின் சார்பில் மாநகர ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பொது சுகாதாரப்பிரிவில் ஈரோடு மாநகராட்சியில் 500 துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். இங்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 4 முறை கையெழுத்திடுவதற்குப் பதிலாகஒரு நாளில்இரண்டு முறை மட்டும் வருகையை பதிவு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பணிக்கருவிகளான அடையாள அட்டை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாணிக்கம்தலைமையில் சிஐடியு மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.