ஈரோடு, ஏப்.10-ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து குமாரபாளையம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, மத்திய அரச விதித்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. சாயக்கழிவுநீர் காவிரியில் கலந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஆட்சி மாற்றம் தேவை என்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கு இங்கு கூடியிருக்கிற கூட்டமே சாட்சி, மத்திய அரசு பாசிச வெறியாட்டம் ஆடி வருகிறது. காந்தியின் உருவபொம்மையை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுகிறார்கள். கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை வைக்க போவதாக கூறுகிறார்கள். மதச்சார்பற்ற தன்மையை ஒழிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் எண்ணம். தமிழகத்தில் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை. 4ஆம் வகுப்பு படித்தால் போதும் என்ற வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் 4 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
ஆகவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்திற்கு வர வேண்டிய போர்டு கார்டு நிறுவனம்,தமிழகத்தில் உள்ளவர்கள் கேட்கும் கமிசன் கொடுக்க முடியாமல் வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். லஞ்ச ஊழல் பெருகிவிட்டது. தமிழகத்தில் வறுமை காரணமாக கால் பவுன், அரை பவுன் என 5 பவுன் வரை அடகு வைத்து பெறப்பட்ட கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு நகைகள் திரும்ப அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேகதாது அணை கட்ட அனுமதி தந்துள்ளார்கள். இதனால் காவிரியில் வரும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்படும். மேட்டூருக்கே தண்ணீர் வராது. மறுபுறம் விவசாய நிலங்களில் மின்கோபுரம் என சீரழித்து வருகிறார்கள். திமுகவிற்கு செல்லும் இடங்களில் கூட்டம் அதிகமாக வருகிறது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியவரே துணை முதல்வர் தான். கலைஞர் மறைந்தபோது மெரீனாவில் இடம் கேட்டு ஸ்டாலின் குடும்பத்தினர் கேட்டனர். ஆனால் முடியாது என்று கூறினீர்கள். இந்நிலையில் தான் திமுக வழக்கறிஞர்கள் போராடி, வாதாடி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம் தந்து உத்தரவு வழங்கினார்.மாநிலத்திலும்,மத்தியிலும், ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும். இவ்வாறு வைகோ பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் மூர்த்தி, நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.