ஈரோடு,ஜூன் 21- ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகளின் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் தொடர்பான விவரங்களை தனியார் பள்ளிகள் 75 சதவீதம் எங்களிடம் கொடுத்துள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப் பெண்களில் குளறுபடி ஏற்பட்டால், அந்த மாணவர், வகுப்பில் நடத்தப்படும் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றார், 9 ஆம் வகுப்பில் எப்படி மதிப்பெண்கள்பெற்றுள்ளார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் உள்ள வேறுபாடு களை சுட்டிக்காட்டி, துறை அலுவலர்கள் தங்கள் கருத்துக் களை வெளியிட முடியாது. அதனால், நடத்தை விதிமுறை களை மீறி செயல்படக்கூடாது என முதன்மை கல்வி அதிகாரி மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சில பள்ளிகளில் ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. அவ்வாறு தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. ரேங்கார்ட்டில் கையெழுத்து போடுவதற்காகத்தான் வந்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பின்போது, 34 ஆயிரத்து 872 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, 3 பாடத் தேர்வினை எழுதாதவர்கள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில், மீண்டும் யார் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என மாணவர் மற்றும் பெற்றோரிடம் கேட்டு, கடிதம் மூலமாக பெறப்படுகிறது. விவரங்கள் வந்த பின்னர் தேர்வு தொடர்பான முடிவு எடுக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் முதல்வர் முடிவெடுப்பார். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.