வாஷிங்டன், ஜூன் 11 - அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எனது தலைமையிலான அமெரிக்க நாட்டினை பிற நாட்டினர் ஏமாற்ற விடமாட்டேன். மோடி தலைமையிலான இந்திய அரசு நமது நட்பு நாடுகளில் ஒன்று. ஆனால் அவர்கள் நமது பொருட்களை இறக்குமதி செய்யும் போது நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள். உதாரணத்துக்கு நாம் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பினால் 100 சதவீதம் வரி விதித்தனர். ஆனால் இந்தியா ஒரு மோட்டார் சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பினால், நாம் அவர்களிடம் வரி எதுவும் வசூலிப்பதில்லை. இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்பது நியாயமற்றது என்றேன். அதன் காரணமாக பிரதமர் மோடி 100 சதவீத இறக்குமதி வரியிலிருந்து 50 சதவீதமாக குறைத்தார். இதுவும் அதிகம் தான், ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வரி விதிப்பதில்லை. அதே போல் அமெரிக்க மோட்டார் வாகனங்களுக்கு இந்தியா வரி விதிக்கக்கூடாது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார் என்றார்.