tamilnadu

திண்டுக்கல் தியாகி அன்னை ஆக்னிஸ்மேரி

1949 ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து திண்டுக்கல் தோல் தொழிலாளர்கள் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் தலைமையில் போராடினர். இதில் ஏ.பாலசுப்பிரமணியம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இச்செய்தியை அறிந்த திண்டுக்கல் நகரின் அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது அதிகாரத்திற்கு சவால் விடுத்த தொழிலாளர்களைப் பழிவாங்க எண்ணிய காவல் துறை அதிகாரிகள் பெண்கள், குழந்தைகள் என்றுகூட பாராமல் கடுமையாக தாக்கினர்.சவேரியார்பாளையம் பகுதியில் குடிசைகளை போலீசார் அடித்து நொறுக்கியதை எதிர்த்துப் போராடிய ஆக்னிஸ்மேரியின் அடிவயிறு மற்றும் உயிர்தலத்தில் பூட்ஸ் காலிலும், லத்தியைக் கொண்டும் ரத்தப் போக்கு வரும் வரை தாக்கி அவரை மதுரை சிறையில் அடைத்தனர். சிறைச்சாலையில் இருந்த போதும், பெண் வார்டன், கைதிகளை கொடுமைப்படுத்தியதை தீரமுடன் எதிர்த்துப் போராடினார் ஆக்னிஸ்மேரி. இதனால், அவர் மீது ஆத்திரமடைந்த வார்டன், ஏற்கெனவே ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்த ஆக்னிஸ்மேரி இறந்துவிட்டதாக அவரது உடலை சிறைச்சாலையில் உள்ள மரத்தடியில் கொட்டும் மழையில் வீசி எறிந்தனர். தோல் பதனிடும் தொழிலாளர்கள் 3 மாத சிறைத் தண்டனை முடிவுற்று, ஆக்னிஸ்மேரியை இழந்த துக்கத்துடன் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் திண்டுக்கல் நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது, திண்டுக்கல் நகர் சோலைஹால் தியேட்டர் அருகில் சாதியின் பெயரைக் கொண்டிருந்த தெருவிற்கு தியாகி ஆக்னிஸ்மேரி தெரு என நகராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் கொண்டு வந்து பெயர் சூட்ட ஏற்பாடு செய்தார்.தோல்ஷாப் தொழிலாளர்கள் மற்றும் தலித் மக்களின் உரிமைக்காக போராடிய தோழர் ஏ.பி. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வீரத்தோடு போராடி உயிர்நீத்த வீரமங்கை ஆக்னிஸ்மேரியின் தியாகத்தை போற்றுவோம்.

இன்று (செப்.18) தியாகி ஆக்னிஸ்மேரி நினைவு நாள்