தருமபுரி, ஏப்.25-பாப்பிரெட்டிபட்டி அருகே சாலையோரம் அபாயகரமான நிலையில் சரிந்து விழும் வகையிலுள்ள புளியமரத்தை அகற்றவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், வகுத்தப்பட்டி அருகே உள்ள ஆலங்கரை பகுதியில் தென்கரைக்கோட்டையில் இருந்து தருமபுரி செல்லும் தார் சாலையின் ஓரத்தில் மிகப் பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் மிகவும் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளது. தற்போது கோடை மழை பெய்யும் போது வேகமான சூறாவளி காற்று வீசுகிறது. அப்போது இந்த மரம் கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சாலை வழியாக அரூரில் இருந்து தென்கரைகோட்டை வழியாக தருமபுரியும் பாப்பிரெட்டிபட்டியில் இருந்து தருமபுரிக்கும் தினசரி இருபதுக்கும் மேற்பட்டபயணிகள் பேருந்துகள், நூற்றுக்கணக்கான தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பழுதடைந்த புளியமரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.