கடலூர்,மார்ச்.21- விவசாய நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்
கடலூர் மலையடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு அங்கு இருந்த பல ஏக்கரில் பயிரிடப்பட்ட முந்திரி மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மாவட்ட நிர்வாகம் முற்றிலுமாக வெட்டி சாய்த்தது.
காலனி தொழிற்சாலை அமைப்பதற்காகவே இங்கு உள்ள நிலங்களை மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு முற்றிலுமாக அழித்து தங்களை அப்புறப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் உயர்நீதிமன்றம் சென்ற நிலையில். உயர்நீதிமன்றம் இப்பகுதியில் விவசாய முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் அழிக்கக் கூடாது என தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவரை விசாரணை செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கும் விதமாக சிபிஎம் தலைமையில் முந்திரி கன்று ண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உட்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்தனர். அதுமட்டுமின்றி போராடிய பெண்களையும் அடித்து அத்துமீறியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும். காவல்துறையின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தார்.