இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் வரும் 30-ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து ஜாதவ் விலகினார்.காயத்தின் வீரியம் சற்று அதிகமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் அறிக்கை அளித்த நிலையில்,உலகக் கோப்பைத் தொடரில் ஜாதவ் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டது. கேதார் ஜாதவை இந்திய அணியின் பிஸியோ பாட்ரிக் பர்ஹர்ட் இரவு பகலாகக் கவனித்துக் காயத்தின் வீரியத்தை குறைத்து வருகிறார். ”ஜாதவின் காயம் விரைவில் குணமாகிவிடும், இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்பு அவர் நல்ல உடற்தகுதியை அடைந்துவிடுவார்” என்று தேர்வுக்குழுவுக்கு பர்ஹர்ட் தகவல் அளித்துள்ளார்.ஐசிசி விதிமுறைகளின்படி மே 23 வரை அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். மே 22 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்திய அணி ஜூன் 5 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது. அதற்குள் ஜாதவின் காயம் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் மே 22 வரை ஜாதவிற்காக காத்திருப்போம் என தேர்வுக்குழு அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. ஒருவேளை ஜாதவ் காயத்தில் தேர்ச்சி பெறவில்லையென்றால் ரிஷப் பண்ட், அம்பாதி ராயுடு, அக்ஷர் படேல், நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ஆகிய 5 வீரர்களிலிருந்து ஒருவரை பிசிசிஐ தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.