tamilnadu

img

இன்னும் 15 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பை தொடரில் அதிக முறை (5) சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியைப் பற்றி இன்று பார்க்கலாம். 

பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ்.

பேட்ஸ்மேன் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள 5 வீரர்களும் சூப்பர் பார்மில் உள்ளனர்.இதில் வார்னர், பின்ச் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.  

ஆல்ரவுண்டர்: கிளென் மேக்ஸ்வெல் (சுழல்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (வேகம்) 

இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள இரண்டு வீரர்களுமே அதிரடியாக விளையாடக்கூடியவர்கள் என்றாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் திறமை மிக்கவர்.இருவரும் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக அணிக்கு உதவக் கூடியவர்கள்.

விக்கெட் கீப்பர்: அலெக்ஸ் காரே. 

புதுமுக வீரரான அலெக்ஸ் காரே துடிப்பாக கீப்பிங் செய்யக்கூடியவர். சர்வதேச அனுபவம் குறைவு  என்றாலும் பிக்-பாஷ் லீக் தொடர்களில் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்துள்ளார்.

பந்துவீச்சு: கனே ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நைல், ஜேசன் பெஹரண்ட்ராப், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, நாதன் லயன்.  

5 வேகம், 2 சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெஹரண்ட்ராப்புக்கு மட்டும் சர்வதேச அனுபவம் குறைவு. கனே ரிச்சர்ட்சன் டெத் ஓவர்கள் மூலம் எதிரணியை சுலபமாக கட்டுப்படுத்தக் கூடியவர். ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரின் அனுபவமும் கைகொடுக்கும். தரைத்தட்டும் சுழலுக்கு பெயர் பெற்ற ஆடம் ஜம்பா - நாதன் லயன் கூட்டணி இங்கிலாந்து களத்தில் மாயாஜாலம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் : பந்துவீச்சு தான் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பலம்.இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சிரமமின்றி வெற்றிகளைக் குவிப்பார்கள். வலிமையான வேகப்பந்து யூனிட்டை பெற்றுள்ளதால் டெத் ஓவர்கள் மூலம் எதிரணியை எளிதில் வீழ்த்துவார்கள். ஒரு ஆண்டாக ஓய்வில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அணியில் சேர்ந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.ஆடம் ஜம்பா, நாதன் லயன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் பகுதி நேரத்தில் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதால் எதிரணிக்கு அதிக குடைச்சல் ஏற்படும். 

பலவீனம் : பழுத்த அனுபவம் பெற்றுள்ள டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் சக வீரர்கள் நெருங்க தயங்குகிறார்கள்.இதனால் அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. டிம் பெய்ன், வாடே போன்ற சிறந்த விக்கெட் கீப்பர் இருந்தும் குறைவான சர்வதேச அனுபவம் பெற்றுள்ள அலெக்ஸ் காரேவை அணியில் சேர்த்தது அதிக பின்விளைவை உருவாக்கும்.  

உலகக்கோப்பையில் எப்படி? 

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் அசுர பலத்தில் ஆஸ்திரேலிய அணி போராட்டம் இல்லாமல் அரையிறுதி வரை செல்லும். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை சமாளித்து வெற்றியை ருசித்தால் கோப்பை கனவை நனவாக்க முடியும்.குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலிய அணி மீது தனி கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இரண்டு அணிகளும் ஒரு தொடரின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திவிட்டால் இறுதி வரை வெற்றிநடை போடும் பழக்கம் உடையவர்கள்.இதனால் இந்தியா, இங்கிலாந்து அணிகளை வியூகத்துடன் சமாளித்து களமிறங்கினால் தான் ஆஸ்திரேலிய அணிக்கு நல்லது. இல்லையென்றால் பார்ம் பிரச்சனையில் சிக்கி வெறுங்கையோடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை வங்கதேசம்...