சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) நடப்பாண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிரிக்கெட் விதிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி ஐசிசியின் கமிட்டி தலைவராக (துறை) நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அனைத்து தரப்பு ஒப்புதலு க்காகக் காலம் தாழ்த்தப்பட்டு அறிவிப்பா ணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், இஷான் மணி இதற்கு முன் பணியாற்றிய நிதி மற்றும் வணிகத் துறைத் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 1996-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த மணி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே பொறுப்பில் அமர உள்ளார். இஷான் மணியுடன் இந்திரா நூயி (சுயாதீன இயக்குனர்), அமிதாப் சவுத்ரி (பிசிசிஐ), கிரிஸ் நென்ஸானி (சிஎஸ்ஏ), இம்ரான் கவாஜா (ஐசிசி துணைத் தலைவர்), இயர்ல் எட்டிங்க்ஸ் (சிஏ) மற்றும் கோலின் க்ரேவ்ஸ் (ஈசிபி). ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் மற்றும் ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி ஆகியோரும் நிதி மற்றும் வணிகத் துறையில் முன்னாள் அலுவலர் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள். இந்தியாவைச் சேர்ந்த யுவராஜ் நாராயண் ஐசிசியின் தணிக்கைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவிலும் இஷான் மணி உறுப்பினராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.