tamilnadu

img

இந்திய அணிக்கு பாடம் எடுத்த ஆப்கானிஸ்தான்

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் வெற்றி நடையுடன் வலம் வருகிறது. நியூஸிலாந்து அணிக்கெதிரான ஆட்டம் மட்டும் மழையால் பாதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய பலமான அணிகளைப் பந்தாடிய  நம்பிக்கையில் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி  அசால்ட்டாக எதிர்கொண்டது. கிரிக்கெட் உலகமும் இந்திய அணி அசுர பலத்தில் இருப்பதால் ஆப்கானிஸ்தானை எளிதாக வெல்லும் என எதிர்பார்த்தது. ஆனால் நடந்ததோ வேறு.  பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சின் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்து 224 ரன்களில் கட்டுப்படுத்தியது.   எளிதான இலக்கான 225 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் பும்ரா, ஷமி பந்துவீச்சில் மட்டும் தடுமாறினர். மற்ற இந்தியப்  பந்துவீச்சாளர்கள் சொதப்ப ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் குஷியாகி சீரான வேகத்தில் ரன் வேட்டையில் களமிறங்கினர்.  தோல்வியடைந்தால் கேவலமாகிவிடும் என்ற நிலையை இறுதிக்கட்டத்தில் உணர்ந்த இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். கடுமையான போராட்டத்துக்குப் பின் ஷமியின் ஹாட்ரிக்கால் ஆப்கானிஸ்தான் அணி சரண்டர் ஆனது. வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் கூட இந்திய அணி இப்படி போராடியதில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி போராடியதற்கான முக்கிய காரணம் அந்த அணியை சாதாரணமாக நினைத்ததுதான்.  இந்த ஆட்டத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு உணர்த்துவது என்னவென்றால், “கோப்பை வெல்லும் மனநிலையில் வலுவாக உள்ளீர்கள்.எங்களைப் போன்று எந்த அணியையும் சாதாரணமாக நினைக்காமல் தாக்குதலோடு ஆட்டத்தைத் துவங்குங்கள்” என கூறியுள்ளது.