tamilnadu

img

மக்களுக்கும், யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யானை வழித்தடங்கள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் மதிவேந்தன்

தமிழகம் முழுவதும் வனப்பகுதி அருகே மக்களுக்கும், யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யானை வழித்தடங்கள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது, அதற்கான வல்லுநர்களும் ஆய்வு மேற்கொள்வதாக வனத்துறையினர் அமைச்சர் எம்.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய வனத் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்.11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள வனப் பணி தியாகிகள் தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பணியின் போது உயிர் நீத்த வனத்துறை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் உயிர் நீத்த தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.மதிவேந்தன் கூறியதாவது:  

வனத்துறையினர் பணியின் போது உயிரைத் துச்சமாக கருகி தங்கள் பணிகளை திறன்பட செய்கின்றனர், அவ்வாறு பணியின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை மற்றும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் யானை - ரயில் மோதலை தடுக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் மனித விலங்கு மோதலை தடுக்கும் வகையில் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானைகள் வரக்கூடிய பகுதிகளில் இருந்து உடனடியாக குறுஞ்செய்தி மூலம் ஊழியர்களுக்குத் தகவல் வருகிறது. உடனடியாக யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்படுகிறது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் உள்ள பகுதி இங்குத் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து யானைகள் வருகிறது. ஒரிரு நாட்களில் யானை வராமல் தடுத்து விட்டு இனி வராது என கூற முடியாது. யானைகள் வந்தால் உடனடியாக அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருதமலை வனப்பகுதி அருகே பிளாஸ்ட் கழிவுகளை யானைகள் உண்பதாக தெரித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையில் வனவிலங்குகளை விரட்டவும், பாதுகாப்பிற்கு நமது துறைக்கு நவீன உபகரணங்களை வாங்க முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன் மூலம் தற்போதைய நவீன உபகரணங்களை வாங்க உள்ளதாகத் தெரிவித்தார். அதே போல யானை வழித்தடங்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மக்களுக்குப் பாதிப்பு என்பது தவறான செய்தி, யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதா? யானைகள் அங்கு எதனால் வருகிறது. யானை வழித்தடத்தில் யானை வருவது தடைபட்டுள்ளதா? என்பது குறித்து துறை வல்லூநர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உடுமலைப்பேட்டை மலை வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் செல்ல உரியச் சாலைகள் அமைக்க பல்வேறு கட்ட பணிகள் உள்ளது. வனப்பாதுக்காப்பு சட்டத்தில் சேர்த்தல்,  இரட்டிப்பு நிலம், தடையின்மை சான்றிதழ் தேவை, குறிப்பிட்ட இடத்தில் உள்ள பிரச்சனை என்ன என்பது குறித்து ஆய்வு செய்து விசாரிக்கிறேன். ஆனைக்கட்டி வனப்பகுதியில் சட்டவிரோதமாக ரெசாட்டுகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் தெரிவித்தார்.