tamilnadu

img

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

கோவை,அக்டோபர்.16- ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒருமாத சம்பளம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இது குறித்துப் பேசிய தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு 2000 ரூபாய் தான் போனஸ் என்று கூறி தருவதாகவும் இது எப்படி போதுமானதாக இருக்கும்? கேள்வி எழுப்பினர். ஒரு மாத சம்பளத்தை தங்களுக்கு போனசாக வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் தங்களுக்கு யாசகம் போடுவதைப் போல் அந்த தொகையைத் தருவதாக வேதனை தெரிவித்தனர். 
வருடா வருடம் தீபாவளி வரும் பொழுதெல்லாம் ஒப்பந்ததாரர்கள் மாறி விடுவதாகவும் இதனால் தங்களுக்கு போனஸ்  முறையாக வருவதில்லை, மேலும் மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் ஓடுவதாக ஒப்பந்ததாரர்களுக்குக் கூறுவதாகத் தெரிவித்த அவர்கள் எப்படி இவ்வளவு பெரிய மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தில் ஓடும் எனவும் கேள்வி எழுப்பினர்?. 
உணவகத்தில் பணிபுரிபவர்களுக்குக் கூட ஒரு மாத சம்பளத்தைத் தீபாவளி போனஸாக வழங்குகிறார்கள் எனவும் ஆனால் தூய்மை பணி செய்யும் தங்களுக்கு வெறும் 2000 அல்லது 2500 ரூபாய் தான் போனஸ் வழங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கொரோனா காலத்தில் அரசு வழங்குவதாக அறிவித்த தொகையையும் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.