tamilnadu

img

மார்ச் 28,29ல் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டம் - அனைத்து சங்கங்கள் மாநாட்டில் முடிவு  

மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது.  

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவிலான அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை கோவை மண்டலத்தில் முழு வெற்றி பெற செய்ய தீவிர களப்பணியாற்றுவது என அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது.  

இந்த மண்டல மாநாட்டிற்கு எம்.எல்.எப். தொழிற்சங்க தலைவர் மு.தியாகராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். ஏ.ஐ.டி.யு.சி கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஆறுமுகம்,  எம்.எல்.எப். திருப்பூர் சம்பத், எல்.பி.எஃப். க.பிரபாகரன், ஐ.என்.டி.யூ.சி. ஏ.சிவசாமி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. வெங்கடாசலம், எஸ்.டி.டி.யூ. ரகுபுநிஷர், பி. சண்முகம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  

இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேலைநிறுத்த தயாரிப்பு மாநாடுகள் பேரவை கூட்டங்கள் ஆகியவற்றை தொழிற்சங்கங்கள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில் கோவை காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு மேற்கு மண்டல மாவட்டங்கள் கலந்து கொள்கிற மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது.    

இந்த மாநாட்டில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை, வெற்றி பெற செய்யும் வகையில் அனைத்து தொழிலாளர்களையும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க செய்வது.

28 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்துவிட்டு கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மையம் என்ற வகையில் 10 மையங்களில் மறியல் போராட்டங்கள் நடத்துவது.

29 ஆம் தேதி கோவை மத்திய தந்தி அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்துவது என்றும் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி முடிய 5 நாட்கள், மாவட்டம் முழுவதும் வேன் பிரச்சாரம் மேற்கொள்வது.

22 ஆம் தேதி கோவை வடவள்ளியில் அனைத்து சங்கங்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மண்டல மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.