tamilnadu

img

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்... கோவை எஸ்.பி.யிடம் மாதர் சங்கம் வலியுறுத்தல்....

பொள்ளாச்சி:
தமிழகத்தில் காவல்நிலையங் களில் பதிவாகும் போக்சோ வழக்குகளை உரிய காலத்திற்குள் விரைந்துவிசாரணை முடித்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு   உரிய நேரத்தில் நீதி வழங்க வேண்டுமென, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்அதிகளவில் நடந்து வருகின்றன. குறிப்பாக  ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் சனியன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அண்மையில் பாலியல் வன்புணர்விற்கு ஆளான மைனர் பெண்ணை சந்தித்து ஆறுதல்கூறினர். இதன்பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணியை சந்தித்து பொள்ளாச்சி காவல் நிலையங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே உரிய நம்பிக்கையை காவல் துறை ஏற்படுத்த வேண்டுமெனவும், மாதர்சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் டி.சுதா தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகி சாந்தா மற்றும் மாதர்சங்கத்தின் சட்ட  உதவி தலைவர் பங்கஜவள்ளி, சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் ரேவதி மற்றும் செயலாளர் டி.விஜயா, தாலுகா கமிட்டி உறுப்பினர் சித்ரா, ஜெயப்பிரியா, மாரியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழுஉறுப்பினரும், மாதர் சங்கத்தின்   கோவை சட்ட உதவி மாவட்ட செயலாளருமான டி.சுதா பேசுகையில்,  பாலியல் குற்றங்கள் தமிழகம் முழுவதும் சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குகள் நடப்பாண்டில் மட்டுமே19ஐ நெருங்கிவிட்டது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி யாகியுள்ளது வருத்தமளிக்கிறது. எனவே, காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள, பதிவாகின்ற போக்சோ வழக்குகளை விரைந்து மூன்று மாதத்திற்குள்ளாக விசாரணையை முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும், நீதித்துறையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.