tamilnadu

img

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலையில் படுகாயமடைந்த இளம்பெண்ணும் பலி

கோயம்புத்தூர்:
மேட்டுப்பாளையம் அருகே வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்ததற்காக அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த வர்ஷினிபிரியா என்ற இளம்பெண்ணும் வெள்ளியன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம்  சீரங்கராயன் ஓடை குப்பம் பகுதியை சேர்ந்தவர்  கனகராஜ். இவர்  அங்குள்ள உருளைக்கிழங்கு மண்டியில் கூலி வேலை செய்து வந்தார்.இவர்  வெள்ளிப்பாளையம்  நகராட்சி துப்புரவு பணியாளர் காலனியை  சேர்ந்த வர்ஷினி பிரியா என்பவரை காதலித்து வந்துள்ளார். வர்ஷினி பிரியா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், வர்ஷினி பிரியாவை திருமணம் செய்வதில் கனகராஜ் உறுதியாக இருந்தார்.இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதியன்று மாலை கனகராஜின்சகோதரர் வினோத்குமார், கனகராஜ், வர்ஷினிபிரியா ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு ப்போராடிய வர்ஷினிபிரியா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த வர்ஷினி பிரியா வெள்ளியன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே தப்பியோடிய வினோத்குமார் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.உடலை பெற மறுப்பு- கோரிக்கைகள் ஏற்புஇதற்கிடையே, தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள இப்படுகொலைகளை நிகழ்த்திய வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் நண்பர்கள் ஐயப்பன், சின்னராஜ், கந்தவேல் மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதாக வர்ஷினி பிரியாவின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இம்மூவரையும் கைதுசெய்யும்வரை உடலை வாங்கமாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார்.  இவருக்கு ஆதரவாக மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரியஅமைப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆனையத்தின் துணை தலைவர் ஐ.முருகன், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சி
யர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள், அமைப்புகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், திராவிடர் விடுதலை கழகத்தின் நேருதாஸ், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையின் அ.சு.பவுத்தன், தமிழ்புலிகள் அமைப்பின் செயலாளர் இளவேனில் ஆகியோர் பங்கேற்றனர். 

இதில், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த  நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; 5 மருத்துவர்கள் குழு வீடியோபதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பசுமை வீடும் நிலமும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இவ்வனைத்து கோரிக்கைகளும் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும்வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உடனடியாக ரூ.4.12 லட்சம் நிவாரணத் தொகைக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் இறுதி பிரேதப்பரிசோதனை 5 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் ஆர்டிஓ தலைமையில் வீடியோ பதிவுடன் நடைபெற்றது. இதன்பின்னர் வர்ஷினி பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தினேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் காவ்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசார் உள்ளிட்ட ஏராளமானோ கலந்து கொண்ட னர்.