கோவை , ஏப்.19-
கோவையில் விதிமுறைகள் மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனியன்று சீல் வைத்தனர். அதே நேரம் தனிமனித இடைவெளி பாதிக்காமல் இறைச்சி விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் யோசிப்பதற்கு பதிலாக உழைப்பாளி மக்களின் உணவு உரிமையை பறிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவினை அடுத்து இறைச்சி கடைகள் செயல்பட கூடாது என கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் விதிமுறைகள் மீறி கோழிக்கறி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மசக்காளிபாளையம் பகுதியில் இருந்த ஒரு கறி கடையில் ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் முன் பக்க கதவை அடைத்து விட்டு பின்புறம் பகுதியில் உள்ள கதவின் மூலமாக கறி விற்பனை நடந்து வந்தது தெரியவந்தது. மேலும், ஆன்லைன் மூலம் இறைச்சி புக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறை மீறி செயல்பட்ட காரணத்தினால் கறி கடைக்கு சீல் வைத்தனர். அங்கிருந்த சுமார் 150 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்தனர்.
உணவு உரிமையை பறிக்காதீர்
இதற்கிடையே , இறைச்சி கடைகள் திறந்துவைப்பதால் கூட்டம் அதிகமாக வருகிறது. இதனால் தனிமனித இடைவெளி பாதிக்கிறது. ஆகவே இறைச்சி விற்பதற்கு தடை என மாவட்ட நிர்வாகம் கூறும் காரணம் ஏற்புடையதல்ல. பெரும்பான்மையான உழைப்பாளி மக்களின் உணவில் ஒன்றாக இறைச்சி உள்ளது. தனி மனித இடைவெளி பாதிக்காமல் இறைச்சியை விநியோகிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் யோசிக்க வேண்டும். இதனை விடுத்து விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது மக்களின் உணவு உரிமையை பறிக்கிற செயலாகும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.