tamilnadu

கோவை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

கோவை, மே 8- ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் புதூரைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (80). இவர், தனது விவசாய நிலத்திற்கு சென்று இயற்கை உபாதையை கழித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை பொன்னம்மாளை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பொன்னம்மாள், கொண்டனூர் வனத்துறை குழுவின் தலைவர் நஞ்சனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. கொண்டனூர் புதூர் கிராமத்தில் முறையான கழிப்பறை வசதிஇல்லாததால், திறந்தவெளி பகுதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் மத்திய அரசின் இலவசகழிப்றை திட்டத்தின் இங்குள்ள வீடுகளுக்கு அரசின் நிதியில் கழிப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இப்பகுதியினர் முன்வைக்கின்றனர்.


கருணை இல்லத்திற்கு சிறுவர், சிறுமியர் சேர்ப்பு

ஈரோடு,மே 8-ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவில் சார்பில் நடத்தப்பட்டு வரும் கருணை இல்லத்தில் பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஐந்து வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சிறுவர் சிறுமியர் சேர்க்கப்படுகின்றனர்.இவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி, உணவு, உடை,இருப்பிடம் ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை கோவில் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தாய் அல்லது தந்தைஇழந்த ஆதரவற்ற வறுமை கோட்டிற்கு கீழ்உள்ளவர்கள் என்பதற்கு வட்டாட்சியரிடமிருந்து சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும். மேலும், சேர்க்கைக்குரிய சிறுவர், சிறுமியரை ஈரோடு மாவட்ட குழந்தைகள்நல குழு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர்கருணை இல்லத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு கோவில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.