tamilnadu

img

இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

 கோவை, மே 22 –நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழனன்று (இன்று) நடைபெறுவதையொட்டி கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி கல்லூரி முன்பு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமானஅரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி வளாகத்தில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தைகோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான கீழ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவல்துறையினர், ஊர்காவல் படையினர் என 1,600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.அதேபோல், அரசு தொழில்நுட்பக்கல்லூரி வளாகம்மற்றும் வெளிப்பகுதிகளில் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் புதன்கிழமை மாலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட துவங்கினர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைபவர்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கையன்று, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முன்பு அரசியல் கட்சியினர் திரண்டு வர வாய்ப்புள்ளது என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.